திமுக கூட்டணியில் பிளவில்லை! இலவு காத்த கிளியாக யாரும் காத்திருக்காதீர்! அதிமுக பற்றி திருமா சூசகம்!
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை என்றும் இதனால் இலவு காத்த கிளியாக யாரும் காத்திருக்காதீர்கள் எனவும் அதிமுக மீது சூசகமாக அட்டாக் செய்துள்ளார் திருமாவளவன்.
திமுக தலைமையிலான கூட்டணியில் தான் விசிக வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றும் திமுக கூட்டணியில் சின்ன சிராய்ப்பு கூட ஏற்படாது எனவும் திருமாவளவன் நம்பிக்கை பொங்கக் கூறியுள்ளார். திமுக காங்கிரஸ் கசப்பிற்கு அதிமுகவிடம் மருந்து உள்ளதாக வைகைச்செல்வன் கூறியிருந்த நிலையில் அதிமுகவை இலவு காத்த கிளி எனக் கூறியிருக்கிறார் திருமாவளவன்.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. முஸ்லீம் லீக், கொமதேக, ஆகிய இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கியதோடு மட்டுமல்லாமல் அது எந்த தொகுதி என்பதையும் அறிவித்துவிட்டது திமுக. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த 2 தொகுதிகள் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
எஞ்சியுள்ள மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இன்னும் இழுபறியாகவே போய் கொண்டுள்ளது. விசிகவும், மதிமுகவும் 3 சீட் எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் 12 சீட்கள் கேட்கின்றன. அதுமட்டுமல்ல தனிச்சின்னத்தில் போட்டியிடுவது பற்றிய பஞ்சாயத்தும் செல்கிறது. இந்தச் சூழலில் அதிமுக தரப்பிலும் காங்கிரஸ் கட்சியை அணுகியதாக செல்வப்பெருந்தகை ஊடக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை என்றும் இதனால் இலவு காத்த கிளியாக யாரும் காத்திருக்காதீர்கள் எனவும் திருமா இன்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியை விட்டு தாங்கள் செல்லப் போவதில்லை என்பதை மிகத் தெளிவாக உணர்த்திவிட்டார். விசிகவை பற்றி ஊடகங்களில் எப்படி வேண்டுமானாலும் யூகங்கள் வெளியிடலாம், அதற்கு தாங்கள் பொறுப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது போல் திரும்பத் திரும்ப 4 தொகுதிகள் கொடுங்க, 3 தொகுதிகள் கொடுங்க என தாங்கள் கேட்போம் என்றார்.












Click it and Unblock the Notifications