“விசிகவை தக்கவைக்க திமுக விரும்பவில்லை.. ஆனால் விஜய் எனக்கு போன் செய்தார்” - திருமாவளவன் பேச்சு
சென்னை: "காலம் மாறி வரும்போது கூட்டணியை தக்க வைக்கும் முயற்சியை திமுக மேற்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளை தக்கவைக்க வேண்டும் என திமுக நினைத்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும்." என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலாஜி, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "பொதுக்கூட்டத்திற்குக் கூட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரும் வலிமையான கட்சி விசிக. ஜென் Z தலைமுறையினர் விசிகவிற்கு அணி திரண்டு வருகிறார்கள். இதனை உளுந்தூர்பேட்டை மாநாட்டில் கண்டோம். உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தமிழ் தேசியம் திசைமாறிச் செல்கிறது என்பது குறித்து பேச ஆர்வத்துடன் வந்தேன். அன்று ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் அது முடியாமல் போனது.
உளுந்தூர்பேட்டை மாநாட்டுக்கு வந்தவர்கள் ஒருவர் கூட பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தவில்லை. ஆனால் எனக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் குறித்து வெளியான வீடியோவால் என்னை சமூக வலைதளத்தில் இழிவாகப் பேசினார்கள்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சிறுத்தைகள் எல்லாம் அவர் பக்கம் சென்றுவிட்டதாக சிலர் பேசினார்கள். ஆனால், உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த ஒரு மணி நேரத்தில், முதல்வர் விஜய்யே என்னை தொடர்புகொண்டு 'சார் Fire சார்.. மிரட்டிட்டீங்க சார்' எனப் பாராட்டினார்.
எந்த விஜய்யை வைத்து என்னை உளவியல் ரீதியாக சோர்ந்து போக வைக்க நினைத்தீர்களோ, அதே விஜய்.. தனித்து நின்று 108 இடங்களை வென்ற விஜய்.. செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கானோரை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட விஜய்.. உளுந்தூர்பேட்டை மாநாட்டை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டும் அளவுக்கு விசிகவினர் என்னுடன் இருக்கின்றனர்.
கொள்கை கோட்பாட்டில் உறுதியாக இருந்து நேர்மையாக இருந்ததால் தான் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்துள்ளோம். திமுக கூட்டணியில் இருந்தபோது, அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேற்ற சாதியவாத, மதவாத கூட்டம் விசிகவை திமுக சொம்பு என வசைபாடினார்கள். திமுகவின் கொத்தடிமை என வசைபாடினார்கள்.
தற்போது நமக்கு அமைந்திருப்பது காலம் போட்ட கணக்கு. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உருவாகும் அதற்கான காலம் கனியும் என கூறிவந்தோம். காலம் கனிந்தது, விசிக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. நாங்கள் உருவாக்கவில்லை. தூது அனுப்பவில்லை.. பேரம் பேசவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக விசிகவிற்கு அமைகிறது. நாங்கள் என்ன செய்யமுடியும்?
காலம் மாறி வரும்போது கூட்டணியை தக்க வைக்கும் முயற்சியை திமுக மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியை தக்க வைக்க வேண்டும். கூட்டணி கட்சிகளை தக்க வைக்க வேண்டும் என திமுக நினைத்து இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். காங்கிரஸ் முதலில் வெளியே சென்ற கட்சி. காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு கூட்டணி குறித்து பேசியது. அதனை எப்படி கையாள வேண்டும் என திமுக சிந்தித்து இருக்க வேண்டும்.
சூழ்ச்சி, வஞ்சகத்தை அறுத்தெறிந்து நேர்மையாக இருந்ததால் அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சதி, சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி செய்பவர்கள் மத்தியில் அரசியல் செய்து வருகிறது விசிக." எனப் பேசினார் திருமாவளவன்.


Click it and Unblock the Notifications
