“ஆர்எஸ்எஸ் விஷயத்தில் விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்” - திருமாவளவன்
சென்னை: அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துகிறது என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இந்த விமர்சனங்களை உறுதி செய்யும் வகையில், "அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு" என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியிருந்தார். இதனை சுட்டிக்காட்டிய விசிக தலைவர் திருமாவளவன், இந்த விஷயத்தில் விஜய் உஷாராக இருப்பார் என கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேட்டியளித்ததாவது, "அதிமுக பெரியார் பாசறையில் வழியாக வந்த ஒரு அரசியல் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ் பிஜேபி போன்ற சக்திகள் இங்கே வளர்வதற்கு இடம் தரவில்லை என்கிற கருத்து வலுவாக இங்கே உண்டு. ஆனால், அவர்களை பின்பற்றக்கூடிய இன்றைய தலைவர் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளுக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த துணிச்சலில்தான் அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பக்கூடிய நிலையும் உருவாகி இருக்கிறது. இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. விஜய்க்கும் அதே போல வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள் என்றால் விஜய் பேச்சிலும் செயலிலும் அந்த சாயல் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர் என்றுதான் இதிலே உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. அவர் எச்சரிக்கையாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஆர்எஸ்எஸ் இங்கே வளர்வதற்கு அதிமுகவோ அல்லது இதரக் கட்சிகளோ வாய்ப்பளிக்குமே ஆனால், அது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாக அமைந்துவிடும் என்பதையும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்கிற முறையிலே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக எல்.முருகன் பேசுகையில், "ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டு கண்ட சமூக இயக்கம். நேரு , அம்பேத்கரே ஆர்எஸ்எஸ் பற்றி புகழ்ந்துள்ளனர். சென்னையில் வெள்ளம் வந்தபோது முதல் களப்பணியாளர்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நின்றனர். ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்பதாக விஜய் கூறுவதாக கேட்கிறீர், ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்டால் அது வரவேற்கத்தக்கது. விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டு அதன்பிறகு விமர்சிக்கட்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications