திமுக கூட்டணியில் பாமக ராமதாஸ் அணியை ஏற்பீர்களா? திருமாவளவன் நேரடியாக சொன்ன பதில்!
சென்னை: பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்ற முடிவை 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்த முடிவில் உறுதியாக இருப்பதாக கூறிய திருமாவளவன், ராமதாஸ் அணியை கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியை கூட்டணியில் கொண்டு வர திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்குள் வந்தால், அதனை விசிக ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்த நிலையில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் இரட்டை என்ஜினா அல்லது டெல்லியில் ஒரு என்ஜின், டெல்லியில் ஒரு என்ஜின் என்ற சொல்கிறாரா என்று தெரியவில்லை.
ஆனால் கூட்டணி யார் தலைமையில் இயங்குகிறது என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது. இது அதிமுகவுக்கு பின்னடைவு தான். தமிழ்நாட்டில் பிரதமரின் ஆதரவோடு என்டிஏ கூட்டணி ஆட்சி மலரும் என்று பேசி இருக்கிறார்கள். அதிமுகவின் ஆட்சி அமையும் என்று பேசும் நிலை இல்லாமல் போய்விட்டது கவலைக்குரியது. அதிமுக பாஜகவின் பிடிக்குள் சென்றுவிட்டது.
அதிமுக சனாதன சக்திகளின் கைகளில் சிக்கிவிட்டது என்பதை எண்ணி வருந்துகிறோம். அதேபோல் பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இருக்கும் அணியில் இடம்பெறப் போவதில்லை என்பதி முடிவு செய்துவிட்டோம். அந்த இரு கட்சிகளின் சாதி மற்றும் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள். பாமகவின் ஒரு அணி மோடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
பாமக ராமதாஸ் அணியை கூட்டணியை இணைத்துக் கொள்வது தொடர்பாக திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும். நாங்கள் எந்த முடிவு எடுக்கக் கூடிய நிலை இல்லை. நாங்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டோம். அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். அதேபோல் திமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications