திருமுருகன் காந்தி விஜய்க்கு வார்னிங்.. "புரிதலற்ற" தவெக இப்போதே ரெடியா இருங்க.. டக்னு கவனித்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட பழைய அரசியல் வரலாற்று விவகாரங்களை முன்வைத்து பேசியதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் விஜய்யின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, முதலமைச்சர் பதிலுரை மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.. சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் முதலமைச்சர் பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதை பற்றி விஜய் எதுவுமே பேசவில்லை.. மாறாக திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டன.

Thirumurugan Gandhi Warns Vijay

முதலமைச்சர் விஜய் பதிலுரை

முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, மிசா காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறையில் அனுபவித்த கொடுமைகளை திமுகவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு வருடகாலம் மிசா கைதியாக சிறையில் இருந்த மு.க.ஸ்டாலின், அப்போது பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டதாகவும், அதன் காயங்களுக்கான தழும்புகள் இன்றும் அவரது உடலில் இருப்பதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சர்க்காரியா கமிஷனில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அப்போதைய முதல்வர் எம்ஜிஆரே தனக்கு தெரியாது என பின்வாங்கியதாகவும், மிசா கைதிகள் அனுபவித்த கொடுமைகள் குறித்து விசாரித்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கை பற்றி விஜய் தரப்புக்கு தெரியுமா என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் 15 கேள்விகள்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய 15 கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் முதல்வர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, தவெக நிர்வாகிகள் தொடர்பான கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட தற்போதைய சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் குறித்தும் விஜய் பதில் அளிக்க வேண்டும் என திமுக தரப்பில் ஆழமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் தெரிந்த சர்க்காரியா கமிஷன் விவகாரம், அமலாக்கத்துறை அறிக்கை என பழைய வரலாறுகளை, பொய்யாக பழி சுமத்தப்பட்ட அறிக்கைகளை தானே புதிதாக கண்டுபிடித்த ஆதாரம் போல் முதல்வர் விஜய் பேரவையில் கத்தி கத்தி ஒப்பித்ததாக இணையத்தில் கமெண்ட்களும் பதிவாகி வருகின்றன.

மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

இப்படிப்பட்ட சூழலில்தான் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும், முதல்வரின் பதிலுரையை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேசியபோது, "புதிய-சர்க்காரிய கமிசன்கள் போன்றவை நாளையே முதல்வர் விஜய் மீதும் ஒன்றிய அரசால் ஏவப்படும். இவை ஊழலை ஒழிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. மாறாக குறிப்பிட்ட ஒரு மாநில கட்சியை ஒழிக்கும் நோக்கம் கொண்டவை. திமுக இவற்றை கடந்து கரையேறியது.

தவெக அந்நிலையை எதிர்கொள்ளும் போது என்ன செய்யும் என சிந்திப்பதும், தயாராவதும் அக்கட்சிக்கு நல்லது. மிசா, தடா, பொடா வழக்குகள் எவர் மீதும் நாளை ஏவப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை குறித்த புரிதலற்ற நிலையில் தான் முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன" என்று காட்டமாக விமர்சித்துள்ளார் திருமுருகன் காந்தி.

இதனால், விஜய்யின் சட்டப்பேரவை பேச்சுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுடன், திருமுருகன் காந்தியின் இந்த எச்சரிக்கையும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. முக்கியமாக திருமுருகன் காந்தியின் இந்த கருத்தை, திமுகவினரும் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+