பிரதமர் மோடியை வரவேற்க.. சென்னையில் காவி உடையில் திருவள்ளுவர்! வாய் திறக்காத தவெக!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். அவரை வரவேற்க காவி உடையில் திருவள்ளுவர் சிலையை பாஜகவினர் வைத்திருக்கின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவையை மோடி இன்று தொடங்கி வைத்திருக்கிறார். இதற்காக சென்னை வந்த அவரை பாஜகவினர் போட்டிப்போட்டுக்கொண்டு வரவேற்றிருக்கின்றனர். குறிப்பாக சென்னை போரூரில் காவி நிற உடையில் திருவள்ளூவர் சிலை வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்களை பொறுத்தவரை திருவள்ளூவர் என்பவர் வெள்ளை உடை அணிந்து, சாந்தமாக இருப்பவர். காலங்காலமாக திருவள்ளூவரை நாம் இப்படித்தான் பார்த்து வருகிறோம். பொதுவாக அவர் சமண முனிவராக பரவலாக அறியப்படுகிறார். அவர் இயற்றிய திருக்குறளில் சமண மதத்தின் தீர்த்தங்கர்களை குறிப்பிடும் வார்த்தைகள் இருப்பதாகவம், கொல்லாமை, புலால் உண்ணாமை போன்றவையும் இடம் பெற்றிருப்பதால் அவர் சமண முனிவராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம் இந்துத்துவா ஆதரவாளர்கள், திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக குறள்களில் உள்ள சில வார்த்தைகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். இதுபோக ஆசீவக மதமும் இவரை சொந்தம் கொண்டாடுகிறது.
இதையல்லாம் பார்த்த தமிழக அரசு, திருவள்ளுவர் உலக மக்கள் அனைவருக்குமானதாக திருக்குறளை எழுதியிருக்கிறார். எனவே அவரை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைக்க கூடாது என வெள்ளை உடை உடுத்தி அழகு பார்த்தது.
இப்படி இருக்கையில் பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்தான் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் பாஜகவினரின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று திருவள்ளுருவருக்கு வெளிப்படையாக காவி உடை உடுத்தப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி தவெக அரசு பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியினர் கூறியிருக்கின்றனர்.
குறிப்பாக திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், "பெரியார் மற்றும் அம்பேத்கரை கொள்கை தலைவராக கொண்டுள்ள விஜய் மற்றும் அமைச்சர்கள் இதைப்பற்றி பேச வாய்ப்பில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம்: திமுக, திமுக, திமுக.." என்று விமர்சித்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications
