வருமான வரி! கடந்த 3 பட்ஜெட்டில் பாஜக செய்தது என்ன? இந்த பட்ஜெட்டின் எதிர்பார்ப்பு இது தான்..!
சென்னை: மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்துள்ள நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்புகள், ஜிஎஸ்டியில் மாற்றம், வரிச்சலுகைகள் உள்ளிட்டவை குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், கடந்த 2 முறையை போல பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மாறாக பீகாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்படி இருக்கையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆட்சிக்கால பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், 20 லட்சம் ரூபாயாக உள்ள முத்ரா யோஜனா திட்டத்தின் கடன் வரம்பை இரட்டிப்பாக்குதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். எல்லாவற்றிலும் முக்கியமாக தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த மூன்று பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் பாஜக செய்த மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கடந்த 2021ம் ஆண்டு, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்,
வருமான வரி அடுக்குகளில் அல்லது தனிநபர்களுக்கான வரி விகிதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை.
ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டுமே உள்ள 75 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள தனிநபர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
டிஜிட்டல் முறையில் 95% பரிவர்த்தனை செய்தவர்களுக்கு வரி தணிக்கை வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது.
மலிவு விலை வீடுகளுக்கு வாங்கிய கடனுக்கான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் கூடுதல் விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
கோவிட்-19 நோய் தொடர்பான மருத்துவச் செலவுகளுக்கு வரி விலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கால வரம்பு அதிகரிக்கப்பட்டது.
இதே 2022ம் ஆண்டு பட்ஜெட்டில், வருமான வரி அடுக்குகள் அல்லது விகிதங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. கூடுதல் வரி செலுத்துவதன் மூலம் மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த 2 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்பட்டது.
மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை (VDAகள்) மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது 30% வரி. அதேநேரம் VDA களை மாற்றுவதற்காக செலுத்தப்படும் கட்டணங்களில் 1% TDS அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கான வரி விலக்கு வரம்பு 10% இல் இருந்து 14% ஆக உயர்த்தப்பட்டது. எல்டிசிஜி கூடுதல் கட்டணத்தை 15% ஆகக் குறைத்தது, இது அதிக மூலதன ஆதாயங்களைக் கொண்டவர்களுக்கு பயனளித்தது.
மாற்றுத்திறனாளிகளை சார்ந்திருப்பவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வருடாந்திரத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான மொத்தத் தொகைக் கழிவு அனுமதிக்கப்பட்டது.
அதேபோல 2023ம் ஆண்டு பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்தப்பட்டது. பிரிவு 87A-இன்படி தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.
2020ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதில் 6 வரம்புகள் இருந்தன. அதனை 2023ல் 5 வரம்புகளாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதாவது ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரி கிடையாது.
ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10% வரி
ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி
ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 30% வரி விதிக்கப்படும்.
அதேபோல இந்த ஆடு பட்ஜெட்டில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக வருமான வரி விலக்க என்பது ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். வரி அடுக்குகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும் வரி விலக்கு வரம்பை ரூ. 7.5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்துவது, நடுத்தர வருமானம் உள்ளவர்களிடையே சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் என FPSB இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷன் மிஸ்ரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications