மாதம் 64000 வரை சம்பளம் வாங்குறீங்களா.. ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?
சென்னை: கடந்த ஆண்டு 60000க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு மாதம் மாதம் 2000க்கு மேல் வருமான வரி என்ற பெயரில் பிடிக்கப்பட்டிருக்கும். சேமிக்க முடியாத அளவிற்கு கடனில் தவிக்கும் பலர், இந்த சிக்கலில் சிக்கியிருப்பார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு முதல் மாதம் 640000 வரை சம்பளம் வாங்குவோர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மாத சம்பளம் வாங்குவோர் தான் வருமான வரித்துறையின் முதல் இலக்காக இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கணிசமாக மாத சம்பளம் வாங்குவோர், வருமான வரியில் இருந்து தப்பிக்கவே முடியாத நிலை இருந்து வருகிறது. ஒரு பக்கம் வீட்டு வாடகை, பள்ளி கட்டணம், எல்ஐசி, குழந்தைகளுக்கு தபால் சேமிப்பு, பைக் இஎம்ஐ, செல்போன் இஎம்ஐ, ஏசி இஎம்ஐ மற்றும் சிலருக்கு இடம் வாங்கியதற்காக பர்சனல் லோன் இஎம்ஐ இருக்கும் .

அந்த வகையில் நடுத்தர வர்க்கத்தினரில் இஎம்ஐ இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. எல்லா செலவுகளுக்கும் பணம் ஒதுக்கிய பிறகு கடைசியில் ஒன்றுமே இருக்காது. வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு ஆறுதலான விஷயம் என்று எதுவுமே இதுவரை இருந்தது இல்லை.. இப்படியான சூழலில் அதில் சேமிக்க வேண்டும், இதில் சேமிக்க வேண்டும் என்றாலும் எப்படி சேமிக்க முடியும்? எனவே சேமிக்க முடியாத காரணத்திற்காக மாதம் மாதம் 2500 முதல் 3000 வரை வருமான வரியாக பலர் கட்டி வந்தார்கள். அவர்களின் சம்பளத்தில் மாதம் மாதம் பிடிக்கப்படும்.
இந்த சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக இப்படிப்பட்டவர்களையும் மனதில் வைத்து இந்த முறை பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லாபில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். இதன்படி ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி என்று இருந்ததை 3 முதல் 7 லட்சம் வரை ஐந்து சதவீதம் வரி என்று மாற்றி உள்ளார ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10% வரி என்று இருந்ததை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10% வரி என மாற்றியமைத்துள்ளார்.
இதேபோல் ரூ.9லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி என இருந்ததை ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் என மாற்றி அமைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேநேரம் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி என இருந்ததையோ அல்லது ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி என்பதையோ நிர்மலா சீதாராமன் மாற்றவில்லை.. இந்த பட்ஜெட்டில் உள்ள மாற்றங்களை பார்க்கும் போது நடுத்தர வர்க்கத்தினர் ஓரளவு சேமிக்க வேண்டும் என்ற முனைப்பு மத்திய அரசிடம் இருப்பது தெரிகிறது. இந்த மாற்றங்களால் இதுவரை 10 லட்சம் வரை வருமான வரி கட்டி வந்தவர்களுக்கு 17500 வரை சேமிக்க முடியும்.
அதேநேரம் கடந்த சில ஆண்டுகளில் சேமிப்பு இல்லாத காரணத்தால் மாதம் மாதம் 2000 வரை வருமான வரியாக செலுத்தி வந்த மாதசம்பளதாரர்கள், இந்த முறை வரியே இல்லாத நிலைக்கு வந்துள்ளார்கள். முன்பு 5 லட்சத்திற்கு மேல் சம்பாதித்தவர்கள் வரி கட்டியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. அதாவது மாதம் 50000க்க மேல் சம்பாதிப்பவர்கள் வரி கட்ட வேண்டிய நிலையில் இருந்தார்கள்.
இப்போது 64000 ரூபாய் மாத சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படாது. ஏனெனில் அரசு 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை வருமான வரி 5 சதவீதம் கட்ட வேண்டும் என்று சொன்னாலும், இந்தியாவில் வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு அரசு அதற்கான 5 சதவீத வரியை வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 87ஏ-ன் கீழ் ரிவர்ட் என்ற ஆப்சன் மூலம் அப்படியே தள்ளுபடி செய்கிறது. வருமான வரி பைலிங் செய்யும் போது இது ஆட்டோமேட்டிக்காக வந்துவிடும். இதன்படி 7 லட்சத்திற்கு 5 சதவீத வரியான 35000த்தை அரசு அப்படியே தள்ளுபடி செய்துவிடும். இதுதவிர 50000 ரூபாய் என்று இருந்த கழிவுத்தொகையை 75000 ஆக அரசு உயர்த்தி உள்ளது. இதன்படி 7.75 லட்சம் வரை வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது.












Click it and Unblock the Notifications