பணிபுரியும் மகளிருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு.. சென்னை, கோவை, மதுரையில் தோழி விடுதிகள்
சென்னை: கோயம்புத்தூர், மதுரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன் பெறும் வகையில் தோழி விடுதி கட்டப்படும் என்று தமிழநாடு சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், அலுவல் ரீதியாகவும் வருகை தரும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முயற்சியாக ”தோழி பெண்கள் தங்கும் விடுதி” தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக நகரங்களை நோக்கி நகரும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் என்பது மிகவும் அவசியமானது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாட்டில் 9 நகரங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் இந்த 'தோழி’ விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
24 மணி நேர பாதுகாப்பு வசதி, சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் வருகைப்பதிவு, காற்றோட்டமான கட்டடங்கள், சுத்தமான அறைகள், வைஃபை வசதி, கேண்டீன் டிவி ஹால், வாஷிங் மெஷின், துணி அயர்ன் செய்தல், சுத்தமான ஆர்.ஓ. குடிநீர், ஏசி வசதி என ஏராளமான வசதிகள் உள்ளன. தனியார் ஹாஸ்டலைக் காட்டிலும் குறைவான கட்டணத்தில் நிறைவான வசதிகள் உள்ளன.
ஒரு நாள், ஒரு வாரம், 15 நாட்கள் அல்லது மாத கணக்கில் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். ஒருவர், இருவர், நான்கு பேர் அல்லது ஆறு பேர் வரை ஒரே அறையை பகிர்ந்து கொள்ளும் முறையும் உள்ளது. இந்த விடுதி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தோழி விடுதி குறித்த முழுமையான விவரங்களை www.tnwwhcl.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். புதிதாக வேலை தேடி வரும் பெண்களுக்கு தோழி விடுதி பாதுகாப்பான தோழியாக இருந்து வருகிறது. இதற்கு, பெண்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பினை இன்று பட்ஜெட்டில் வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, கோயம்புத்தூர், மதுரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன் பெறும் வகையில் தோழி விடுதி கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல சிப்காட் வளாகங்களில் பணிபுரியும் மகளிரின் குழந்தைகளை பாதுகாக்க, குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் மகளிரின் மனம் குளிரும் வகையிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications