Tiger Chase: புலியை விரட்ட முடியுமா? நான் அமைச்சர்..! முதுமலை புலிகள் காப்பக சர்ச்சை! வன்னியரசு
சென்னை: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை. புலியை யாராவது விரட்ட முடியுமா? அதன் மீதான ஆர்வத்தின் பேரில் பார்க்க ஓடினேன், விரட்டவில்லை என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்த அவர் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் புலிகள் காப்பகத்திற்கு சென்றதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை. நான் முறையாக அனுமதி பெற்றே சென்றேன். புலியை யாராவது விரட்ட முடியுமா? புலியை நேரில் பார்த்ததும் ஆர்வ மிகுதியால் அதை இன்னும் நன்றாக பார்ப்பதற்காக சென்றேன். மற்றபடி நான் விரட்டவில்லை.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் வருத்தப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் கால் பதிக்காத காடுகள் இல்லை. நான் ஒரு அமைச்சர், எனக்கு பொறுப்பிருக்கிறது. அமைச்சரானதும் முதல் முறையாக காட்டுக்கு சென்றேன் என வன்னியரசு விளக்கமளித்தார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த 10 ஆம் தேதி சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதுகலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கு தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று அவர் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த ரீல்ஸ் நேற்று முன் தினம் (நவ.15) வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடர்ந்த வனப்பகுதிக்குள் புலியை விரட்டி செல்லும் காட்சியும் அந்த ரீல்ஸில் இடம் பெற்றுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடந்து சென்று ரீல்ஸ் எடுக்க அமைச்சருக்கு வனத்துறை எவ்வாறு அனுமதி கொடுத்தது என விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வன்னியரசின் செயலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முதுமலை வனப்பகுதியில் புலியையே விரட்டிச் சென்றதா சிறுத்தை? - சமூகநீதிப் போராளிகளையும் விட்டுவைக்காத தற்குறிகளின் Reels மோகம்!
முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் வன்னியரசு, வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப் பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் வன்னியரசு மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் வன்னியரசு மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்திருந்தார். அதற்கு வன்னியரசு பதில் கொடுத்துள்ளார்.




Click it and Unblock the Notifications
