CNN News 18 Exit poll 2026: திமுக- அதிமுக இடையே கடும் போட்டி! கிங்மேக்கர் ஆகிறாரா விஜய்?
சென்னை: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்த Exit Poll முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியைக் காட்டுகின்றன.
தமிழகத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 85.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிக வாக்குகள் பதிவாகியிருந்ததால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
News18 கணிப்புகளின்படி, தமிழகத்தில் இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 114 முதல் 124 இடங்களை வரை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் (தேவை 118 இடங்கள்) ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுக மிக நெருக்கத்தில் உள்ளதாக இந்தக் கணிப்பு கூறுகிறது.

திமுக கூட்டணிக்கு கடும் சவால்
மறுபுறம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 103 முதல் 113 இடங்களை மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலை விட கணிசமான சரிவாகும். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை (Anti-incumbency) மற்றும் சில குறிப்பிட்ட மண்டலங்களில் நிலவும் அதிருப்தி ஆகியவை திமுகவின் பலத்தைக் குறைத்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், திமுக - அதிமுக இடையே மிகக் குறைந்த வாக்கு சதவீத வித்தியாசமே இருப்பதால், முடிவுகளில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் 'தவெக'!
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுவது நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தான். முதல் முறையிலேயே தேர்தலைச் சந்திக்கும் தவெக, 4 முதல் 10 இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிங் மேக்கர் வாய்ப்பு: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கூட்டணிகளும் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைப் பெறுவதில் இழுபறி நீடித்தால், விஜய் தலைமையிலான 'தவெக' ஆட்சியமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக (Kingmaker) மாறக்கூடும் என சிஎன்என் நியூஸ் 18 கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் விஜய் தீயசக்தி திமுக என கூறி வரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார். ஒரு வேளை அதிமுக கூட்டணியுடன் சென்றால் அங்கு பாஜக இருப்பதால் அவர் கூட்டணி அமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுகவை தனது பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதிலும் எடப்பாடி தொகுதியை விட்டு வேறு தொகுதியில் பழனிசாமி போட்டியிட்டு வெல்ல முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
மண்டல வாரியான நிலவரம் (முக்கியப் புள்ளிகள்):
கொங்கு மண்டலம்: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலத்தில் அதிமுக மீண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.
சென்னை மண்டலம்: எப்போதும் திமுகவின் பலமாக இருக்கும் தலைநகர் சென்னையில் இந்த முறை அதிமுக மற்றும் தவெக கணிசமான வாக்குகளைப் பிரித்துள்ளன.
தெற்கு மண்டலம்: தென் மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுக இடையே சரிசமமான போட்டி நிலவுகிறது.
வாக்கு சதவீதம்:
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, அதிமுக கூட்டணி சுமார் 41% வாக்குகளையும், திமுக கூட்டணி 39% வாக்குகளையும் பெறும் எனத் தெரிகிறது. தவெக சுமார் 13% முதல் 15% வரையிலான வாக்குகளைப் பிரித்து, திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையைப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.
நியூஸ் 18-ன் இந்த எக்சிட் போல் முடிவுகள் அதிமுகவுக்குச் சாதகமாக இருந்தாலும், உண்மையான முடிவுகள் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தான் தெரியவரும். எனினும், தமிழக அரசியல் தளம் இப்போது இருமுனைப் போட்டியில் இருந்து மும்முனைப் போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இது தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்பு மட்டுமே, இறுதி முடிவு அல்ல. வாக்கு எண்ணிக்கையின் போது முடிவுகள் மாறக்கூடும்.












Click it and Unblock the Notifications