TIMELINE-142 நாள் லேட்..47 பேர் பலி! ஆன்லைன் ரம்மி மசோதாவை ரிடர்ன் செய்த ஆளுநர்-இதுவரை நடந்தது என்ன?
இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் ஆளுநர் ரவியை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்ததாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்த பல்வேறு தரப்பினர் தற்கொலை செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 142 நாட்கள் கழித்து தற்போது அந்த மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ள நிலையில் இதுவரை நடந்தது என்ன என்று பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலையிழந்து தவித்த நிலையில், ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் வருகை பெருமளவில் அதிகரித்தன.
ஊரடங்கால் வருவாய் இழந்த மக்கள் தொலைக்காட்சிகள், செல்போன்களில் வரும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த நடிகர்களின் பேச்சை கேட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பி அதை விளையாட தொடங்கினார்கள்.

ஆசைகாட்டி மோசடி
சிறிய தொகையை விளையாட தொடங்கியவுடன் பரிசாக வழங்குவதைபோல் கொடுத்து மக்களுக்கு ஆசையை அதிகரித்தன ஆன்லைன் சூதாட்ட செயலிகள். இதனால் கூடுதல் நம்பிக்கை பெற்ற மக்கள் பெரும் தொகையை கொடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி அவர்கள் தோற்றதாக அறிவித்து பெரிய தொகையை எடுத்துக்கொண்டன.

நடிகர்கள் விளம்பரம்
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பல லட்சம், பல கோடிகள் என பெரும் தொகையை ஊதியம் பெற்றுக்கொண்டு சென்ற நிலையில், அதனை பதிவிறக்கம் செய்த மக்கள் பெரும் தொகையை பறிகொடுக்கத் தொடங்கினர். வட்டிக்கு கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடிய பலர் பணத்தை இழந்து தற்கொலை என்னும் துயர முடிவை தேடினர்.

தடை செய்த அதிமுக அரசு
காவல்துறையை சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்ப தலைவிகள் என பல்வேறு தரப்பட்டவர்கள் இதில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அப்போதைய அதிமுக அரசு தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியதால் சில மாதங்கள் அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது.

அனுமதியளித்த உயர்நீதிமன்றம்
இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இதனால் மீண்டும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

திமுக அரசு அவசர சட்டம்
அதை விளையாடி தற்கொலை செய்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. இந்த சூழலில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை விதிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு. அதன் தொடர்ச்சியாக கடந்த 2022 அக்டோபர் மாதம் அவசர சட்டத்தை சட்டசபையில் தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.

காலாவதியான சட்டம்
ஆனால், ஆளுநர் ரவி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் 6 வாரம் கழித்து கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது. இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் ஆளுநர் ரவியை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்ததாக வெளியான செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

47 பேர் பலி
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு பிறகு பல்வேறு தரப்பை சேர்ந்த 15 பேர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர். கடந்த 7 நாட்களில் 2 பேர் இதனால் தற்கொலை செய்து உள்ளார்கள். இதுவரை மொத்தம் 47 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இன்றுடன் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்துவிட்டன. இதற்கு ஒப்புதல் வழங்காத காரணத்தால் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது. இந்த நிலையில் இன்று அவசர சட்டத்தில் திருத்தங்கள் செய்து அனுப்பி வைக்குமாறு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.












Click it and Unblock the Notifications