லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு அதிக சீட்! ஆனால்.. பரபர டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பற்றி டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 'இந்தியா' கூட்டணி 34 சீட்கள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாஜக , ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைக்க வியூகம் வகுத்து வருகிறது. மறுபுறம், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

பீகார் மாநிலம் பாட்னாவிலும், அதற்கு அடுத்து கர்நாடகா மாநிலம் பெங்களூரிலும் கூடி எதிர்க்கட்சிகள் ஆலோசித்துள்ளன. இந்தக் கூட்டணிக்கு 'இந்தியா' கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 24 கட்சிகள் இந்தக் கூட்டணியில் உள்ளன. இந்தக் கூட்டணி கட்சிகளின் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலயில், தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. தேசிய ஊடகங்கள், கருத்துக்கணிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், டைம்ஸ் நவ் ஊடகம் ETG உடன் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் கருத்துக்கணிப்பில், மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறும் பிரதமராக நரேந்திர மோடி இருப்பார் எனத் தெரிவிக்கிறது டைம்ஸ் நவ் - இ.டி.ஜி கருத்துக்கணிப்பு.
டைம்ஸ் நவ் - ETG கருத்துக்கணிப்பில் பாஜக 300+ இடங்களில் வெற்றி பெறும் என்றும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 160-190 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2019ல் பாஜக கூட்டணி 353 இடங்களில் வென்ற நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் 296-326 தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணி, 30-34 இடங்களையும் 57.2% வாக்குகளையும் கைப்பற்றும் என்றும், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 4-8 இடங்களையும், 27.8 சதவீத வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி 37 இடங்களையும் பாஜக கூட்டணி 1 இடத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், வரும் தேர்தலில் 4-8 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பாக திமுக 20-24 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 9-11 இடங்களிலும், அதிமுக 4-8 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்கள் வரை வெல்லக்கூடும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications