இந்தியாவிலேயே முதல்முறை.. ஜிலேபி மீன்களை தாக்கும் திலபியா பார்வோ வைரஸ் தமிழகத்தில் கண்டுபிடிப்பு
சென்னை: ஜிலேபி மீன்களை தாக்கும் திலபியா பார்வோ வைரஸ் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இந்த TiPV வைரஸ், பண்ணைகளை தாக்கினால் 30 முதல் 50 சதவீதம் மீன்கள் இறந்து போகும் என்றும், ஆய்வகத்தில் 100 சதவீதம் இறப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
முன்பெல்லாம் தமிழகத்தில் கிராமங்களில் உள்ள குளங்களில் பல மீன்கள் தவழும்.. விளிச்சிக் கெண்டை, அயிரை, நரிக் கெழுறு, மஞ்சக் கெழுறு, வட்டக் கெண்டை, பால் கெண்டை, பாம்புக் கெண்டை, கூனக் கெண்டை, ஆரா, உளுவை, விலாங்கு, விரால், குரவை என பல வகை மீன்கள் தமிழக குளங்களில் இருக்கும்.

இப்போது தமிழ்நாடடு குளங்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரே மீன் வகை 'ஜிலேபிக் கெண்டை . இதன் உண்மையான பெயர் திலேபியா(Tilapia). இது தமிழகத்தைச் சேர்ந்த மீன் வகையல்ல.. இது ஆப்பிரிக்க வகை மீன். 1952இல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. 1960களில் தமிழகம் முழுக்க கிராமங்கள்தோறும் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன. அந்த மீன்கள் தான் இப்போது பல குளங்களை ஆக்கிரமித்துள்ளன. உண்மையான பெயரான திலேபியா மருவி ஜிலேபிக் கெண்டை என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
"ஏழைகளின் மீன்" என்று அழைக்கப்படும் இந்த ஜிலேபிக் கொண்டை மீனுக்கும் தமிழ்நாட்டு மீன்களுக்கும் சில வித்தியாசம் உள்ளது. நம்மூர் மீன்கள் எல்லாவற்றையும் சாப்பிடாது..ஆனால் ஜிலேபி மீன் தண்ணீர் எவ்வளவு மாசுபட்டு இருந்தாலும் அதில் வாழ்ந்து, கிடைக்கும் அனைத்தையுமே சாப்பிடும். மேலும் நம்மூர் மீன்களின் குஞ்சுகளையும் தேடி பிடித்து சாப்பிடும். மேலும் இனப்பெருக்கம் என்பது ஜிலேபி மீன்கள் தான் டாப். நம்மூர் மீன்களை அழித்து வருவது இந்த ஜிலேபி மீன்கள் தான். தண்ணீரில் குறைந்த ஆக்ஸிஜன் அளவுகளில் உயிர்வாழும் திறன் கொண்ட இந்த மீன், பல வருடங்களாக தமிழக குளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
இது ஒருபுறம் எனில் 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட நைல் திலாப்பியா (ஜிலேபி கெண்டையின் பெரிய ரகம்) தற்போது பெரிய அளவில் வளர்க்கப்பட்டு சந்தையில் ஒரு கிலோ ₹100 முதல் ₹150 வரை விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில், திலாப்பியா சுமார் 70,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 30,000 டன்கள் மீன் பண்ணைகள் மூலம் வளர்ப்பதில் வருகிறது.
இந்நிலையில் இந்த ஜிலேபி மீன்களுக்கு முதல்முறையாக பெரிய கண்டம் வந்துள்ளது. ஜிலேபி மீன்களை தாக்கும் திலபியா பார்வோவைரஸ் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இந்த டிஎன்ஏ வைரஸ் பண்ணைகளை தாக்கினால் 30 முதல் 50 சதவீதம் மீன்கள் இறந்து போகும் என்றும், ஆய்வகத்தில் 100 சதவீதம் இறப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் உள்ள குளங்களில், நன்னீர் மீன் இனமான பண்ணையில் வளர்க்கப்படும் ஜிலேபி மீன்களை திலபியா பார்வோவைரஸ் (TiPV) பாதித்துள்ளது. மீன்களில் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பதிவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி சி. அப்துல் ஹக்கீம் கல்லூரியின் (CAHC) நீர்வாழ் விலங்கு சுகாதார ஆய்வகத்தின் (AAHL) இயக்குனர் டாக்டர் சாஹுல் ஹமீத் கூறுகையில்,"ஜிலேபி மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள 10 குளங்களில் இருந்து மீன் மாதிரிகள் சேகரித்தோம், மேலும் எட்டு குளங்களில் உள்ள மீன்களையும் ஆய்வு மூலம சோதித்தாம். இதில் திலபியா பார்வோவைரஸ் (TiPV) பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இந்த வைரஸ் பண்ணையில் உள்ள ஜிலேபி மீன்களை 30 முதல் 50% வரை அழித்துவிடும். ஆய்வகத்தில் இருந்தால் 100% இறப்பு ஏற்படும் .
எங்க கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு, இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன், திலபியா பார்வோ வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதற்காக, R&D திட்டத்தின் கீழ், வைரஸ் நோய்க்கிருமிகளுக்கான திலாப்பியாவைத் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறோம்.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வைரஸ் நோய்க்கிருமிகள் மீன்களை பாதித்துள்ளதா என்பதை அறிய பரிசோதித்த போது, வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. TiPV முதன்முதலில் 2019 இல் சீனாவிலும், 2021 இல் தாய்லாந்திலும் பதிவாகியது. தற்போது இந்தியாவிலும் இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு குறித்த எங்கள் ஆராய்ச்சி கண்டுபிடிப்பை, லக்னோவில் ICAR-மீன் மரபணு வளங்களுக்கான தேசிய பணியகம், புவனேஸ்வரில் உள்ள ICAR-மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் மற்றும் கொச்சினில் உள்ள கேரளா மீன்வள மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு அனுப்பி உறுதி செய்துள்ளோம். இந்த கண்டுபிடிப்பு வைராலஜி காப்பகத்தில் (ஸ்பிரிங்கர் நேச்சர் சுவிட்சர்லாந்து ஏஜி) வெளியிடுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
டிஐபிவி வைரஸால் ஏற்படும் இழப்பைத் தடுக்க மீன் விவசாயிகளுக்கு உதவும் வகையில் TiPVக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சி தொடங்கப்பட வேண்டும். இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் " இவ்வாறு டாக்டர் சாஹுல் ஹமீத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications