அசுரனை வென்ற இடம்! திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! கடற்கரையெங்கும் பக்தர்கள் கூட்டம்! குவிந்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் கடற்கரை பகுதியில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா இந்த ஆண்டு கடந்த 10ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்களாக காலை, மாலை என இருவேளைகளிலும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

Tiruchendur Soorasamharam

விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், கந்தசஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடைபெறுகின்றன. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதில் சுவாமி ஜெயந்திநாதர் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், தொடர்ந்து சிங்க முகம் மற்றும் பிற வடிவங்களில் வரும் சூரனையும் முருகப்பெருமான் தனது வேலால் வதம் செய்யும் நிகழ்வுகள் நடைபெறும். இறுதியாக மாமரமாக உருமாறி வரும் சூரபத்மனை முருகப்பெருமான் தனது வேலால் பிளந்து, மயில் மற்றும் சேவலாக ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் ஏற்றுக்கொள்ளும் இந்த தெய்வீக நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 325 நிரந்தர கழிப்பறைகளுடன் 300 தற்காலிக கழிப்பறைகளும், 69 குளியலறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் ஏற்கனவே உள்ள 384 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 149 தற்காலிக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

23 இடங்களில் குடிநீர் வசதியும், 10 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்கு வழங்குவதற்காக 300 மில்லி அளவிலான 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் நிரந்தர மருத்துவ வசதியுடன், 6 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக 7 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் கடற்கரை பகுதியில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மரைன் போலீசார் மற்றும் கோவில் பாதுகாப்புக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்புத் துறையினரும் கடற்கரை பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் மூன்று ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.

மேலும் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்காக நான்கு மினி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்காக 12 இடங்களில் தற்காலிக பேருந்து மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் தங்குவதற்காக ஏற்கனவே உள்ள 5 நிரந்தர கொட்டகைகளுடன் கூடுதலாக 6 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தைக் காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+