திமுகவில் இணைந்தார் திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயனின் மகன் பாரதி!
சென்னை: "அரசியல் அனுபவமும் அறிவும் இல்லாததால் அரசியல் களம் தரம் தாழ்ந்து போயுள்ளது, வெறும் பஞ்ச் டயலாக்குகள் பேசுவது அல்லது தவறான செய்கைகளைச் செய்வதுதான் நடக்கிறது" என திமுகவில் இணைந்த பின்பு திருப்பூர் எம்பி சுப்பராயனின் மகன் பாரதி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருப்பூர் நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், செயலாளர் சுரேஷ் மற்றும் நவீன மனிதர்கள் குழுவினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைத்துக் கொண்ட பின்பு பாரதி சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "இன்றைய சூழலில் அரசியல் தரம் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அரசியல் அனுபவமே இல்லாத ஒரு நடிகர் முதலமைச்சராக இருக்கிறார்.
போஸ்டர் ஒட்டியவர்களும், கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்தவர்களும் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவியில் இருக்கிறார்கள். அவர்களால் சரியான நிர்வாகத்தை வழங்க முடிவதில்லை.
அரசியல் அனுபவமும் அறிவும் இல்லாததால் அரசியல் களம் தரம் தாழ்ந்து போயுள்ளது. வெறும் பஞ்ச் டயலாக்குகள் பேசுவது அல்லது தவறான செய்கைகளைச் செய்வதுதான் நடக்கிறது.
சரிந்து வரும் அரசியல் தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் 'நவீன மனிதர்கள்' அமைப்பிலிருந்து விலகி திமுகவில் இணைகிறோம்.
ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மொழி ஆதிக்கம் மற்றும் மாநில உரிமைகள் மறுக்கப்படும் சூழலில், சரியான கொள்கைகளை வகுத்துச் செயல்படும் திமுகவின் கொள்கைகளோடு நாங்கள் ஒத்துப் போவதால் மக்களிடம் இக்கொள்கைகளைக் கொண்டு சேர்க்க திமுகவில் இணைகிறோம் என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் பொழுது திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் உடன் இருந்தார். பாரதி சுப்பிராயன் முன்னணி தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.



Click it and Unblock the Notifications
