ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக
சென்னை: ஆதவ் அர்ஜுனா மூலம் 'ஜனநாயகன்' படத்தை வெளியிட வைத்து, பாஜக மீதும் மத்திய அமைச்சர் எல். முருகன் மீதும் பொய் குற்றம் சாட்டி விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என்று தெரிவித்துள்ளது தமிழக பாஜக. படம் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை கோர தயாரா என்றும் சவால் விடுத்துள்ளது.
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், படத்தின் சில காட்சிகளுக்குத் தணிக்கைக் குழு ஆட்சேபம் தெரிவித்ததால், வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

இதற்கிடையில் விஜய் முழுநேரத் தேர்தல் களத்தில் இறங்கியதால், இப்படம் தேர்தலுக்குப் பிறகுதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஆரம்பக் காட்சிகள் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது முழு திரைப்படமுமே இணையத்தில் கசிந்திருப்பது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அது சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது சாட்டிலைட் பாஜகவின் வசமே உள்ளது. எனவே, திட்டமிட்டுப் படத்தை இணையத்தில் கசியவிட்டு, விஜய்க்கும் தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி மிரட்டியிருக்கிறார்கள். இதற்கு துணை முதல்வர் உதயநிதியும் மத்திய அமைச்சர் எல்.முருகனும்தான் காரணம் என தவெக தேர்தல் பிரச்சர மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜனநாயகன்' படம் இணையத்தில் வெளியானதால் ரூ.500 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி பரிதாப வாக்குகளைப் பெற விஜய் நாடகம் ஆடுகிறார்.
பாஜக மீதும் மத்திய அமைச்சர் எல். முருகன் மீதும் பொய் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் பட்டியல் சமூக பிரதிநிதியாக நேர்மையோடு செயல்படும் மத்திய அமைச்சர் எல். முருகனை அவமதிக்கும் நோக்கத்துடன், அவதூறு பரப்பிவிட்டு அம்பேத்கர் தான் எங்கள் கொள்கை தலைவர் என்று கூறுவதற்கு விஜய் வெட்கப்பட வேண்டும். இது குறித்து சிபிஐ விசாரணையை கோர விஜய் தயாரா?
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக காவல்துறையில் இதுவரை ஏன் புகார் அளிக்கப்படவில்லை? சென்சார் போர்டிலும் ஏன் முறையிடவில்லை? ஜனநாயகம் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு மத்திய அமைச்சர் முருகனும் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறி இருப்பது வடிகட்டிய பொய். அவர் மீது பாஜக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.
எம்ஜிஆரையும் விஜய்யையும் இணைத்துப் பேசி அதிமுக ஓட்டுக்களை பிரிக்கலாம் என்றும், ஜனநாயகன் படம் விவகாரத்தில் பாஜகவிற்கு எதிராக அவதூறு பேசி வாக்காளர்களை குழப்பி ஆதாயம் தேடலாம் என்றும் ஆதவ் அர்ஜுனா கருதுகிறார். கீழ்த்தரமான அவரது இந்த பகல் கனவு பலிக்காது.
திமுகவுக்கு ஓட்டு போடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications