ஆமைக்கறி சாப்பிட்டேன், கள்ளத்தோணியில் போனேன்.. தமிழக அரசியல்வாதிகளின் தினப் பேச்சு.. அண்ணாமலை பொளேர்
சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கையில் இருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு (மலையகத் தமிழர்களுக்கு) ஆளும் திமுக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரியில் தமிழக அரசுக்கு சொந்தமான டேன் டீ தேயிலை தோட்ட நிலம் மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் மலையகத் தமிழர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்; இதனைக் கண்டித்து தமிழக பாஜகவினர் நீலகிரி கூடலூரில் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்துக்கு வந்த 5 லட்சத்து 25 ஆயிரம் பேர்.. 1963-ல் இருந்து 15 வருஷத்துக்குள்ள தமிழ்நாட்டுக்கு வந்தாங்க.. இன்னைக்கு அவங்க எப்படி இருக்காங்க? தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா அரசியல்வாதிகளுமே தூங்கி எழுந்தா பேசக் கூடியது இலங்கை பிரச்சனை மட்டும்தான்.

ஆமைக்கறி
இங்கே ஒரு அரசியல்வாதி சொல்வாரு.. நான் ஆமைக்கறி சாப்பிட்டேன்.. இன்னொரு அரசியல்வாதி சொல்வாரு.. நான் கள்ளத்தோணி ஏறிப் போனேன்.. இன்னொரு அரசியல்வாதி சொன்னாரு.. பிரபாகரன் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.. இதெல்லாம் தமிழக அரசியல்வாதிகளின் தினப் பேச்சு

டேன் டீ நிறுவனம்
ஆனால் 5.25 லட்சம் தமிழர்கள், அங்கே இருந்து இங்க வந்து 40,50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் வசிக்கக் கூடிய வீட்டுக்கு போன தீப்பெட்டி சைஸ் வீடு.. லைன் வீடு.. அதில்தான் வாழ்கின்றனர். இந்த தமிழர்கள் குடியுரிமையுடன் அமர்வதற்கு தொடங்கப்பட்டதுதான் டேன் டீ. இன்றைக்கு அந்த டேன் டீ நிறுவனத்தின் நிலைமையை பாருங்க.

டேன் டீ நிலம் தாரை வார்ப்பு
1963-ல் இந்திய வம்சாவளித் தமிழருக்கு உறுதியளித்து வால்பாறைக்கு, கூடலூருக்கு கொண்டு வந்து டேன் டீயில் பணி அமர்த்தினோம். ஆனால் இன்றைக்கு மீண்டும் செய்வது அறியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். இந்த நிறுவனத்தை மூடப் போகிறோம் என்பதற்கு தமிழக அரசு சிக்னல் கொடுத்துவிட்டது. டேன் டீக்கு கீழே வரக் கூடிய 5315 ஏக்கர் நிலத்தில் டீ விளைச்சல் குறைவாக இருக்கிறது. அந்த நிலம் தன்மை மாறி இருக்கிறது. அதனால் நாங்கள் வனத்துறைக்கு கொடுக்கிறோம் என ஜிஓ போட்டு கையெழுத்து போட்டுவிட்டனர். இது தமிழ் சொந்தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற 2-வது அநீதி.

முதல்வரின் அநீதி
அன்றைக்கு 1948-ல் இலங்கை இந்திய வம்சாவளி தமிழருக்கு முதலாவது அநீதியை இழைத்தது. இப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது அநீதியை இழைத்துள்ளார். அப்ப இலங்கை அரசு செய்ததற்கும் மு.க.ஸ்டாலின் செய்ததற்கும் என்ன வித்தியாசம்? இலங்கை அரசு செய்த அதே தவறை இன்று தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். இன்று 700 பேருக்கு வேலை இல்லை. அவர்கள் வேலை இழந்துவிட்டனர்; மிரட்டி கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என சொல்லி இருக்கின்றனர். வீட்டை விட்டு வெளியேறாதவர்கள் வீட்டில் நோடீஸ் ஒட்டி உள்ளனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பாஜக சும்மா இருக்க வேண்டும் என திமுக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


Click it and Unblock the Notifications
