புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் அண்ணாமலை. அவர் பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், அதற்கு அண்ணாமலை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தமிழக பாஜகவில் மிக முக்கியமான முகமாக இருந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தார். முதலில் ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் அண்ணாமலை இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ரஜினி கட்சி தொடங்காததால் அண்ணாமலை தனது திட்டத்தை மாற்றினார்.

2021 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல் முருகனுக்கு பதிலாக அண்ணாமலை புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரே மாநிலத் தலைவராகச் செயல்பட்டார். வேல் யாத்திரை தொடங்கி பாஜகவை மாநிலத்தில் வளர்க்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். 2024 லோக்சபா தேர்தலிலும் அதிமுகவை விட்டு தனியாகக் கூட்டணி அமைத்ததில் அண்ணாமலைக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.
இந்தச் சூழலில் தான் 2025ல் அவர் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தலைமை பொறுப்பிற்குக் கொண்டு வரப்பட்டார். அதன் பிறகு அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதிமுக உடன் பாஜக அமைத்த நிலையில், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பொதுவெளியில் அண்ணாமலை எதுவும் சொல்லாமலேயே இருந்தார்.
இதற்கிடையே தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து அண்ணாமலை புதிய கட்சியைத் தொடங்கலாம் என்று தகவல்கள் வெளியானது. கடந்த சில வாரங்களாகவே இந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. அதேபோல அண்ணாமலை தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு வரவில்லை. மவுனமாகவே இருந்தனர்.
இந்தச் சூழலில் தான் இன்று திடீர் பயணமாக அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். புதிய கட்சி தொடங்குகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, அண்ணாமலை அதற்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. வெறுமன, "இப்போது பேசினால் சரியாக இருக்காது.. எல்லாக் கேள்விகளுக்கும் 2 நாட்களில் பதில் சொல்கிறேன்" என்று மட்டும் பதிலளித்தார்.
செய்தியாளர்கள் பல முறை கேட்ட போதிலும், அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து எந்தவொரு கருத்தும் கூறவில்லை. மேலும், குறிப்பாக அவர் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் கட்சி தொடங்குவது கிட்டத்தட்ட உறுதி என்றே நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மேலும், அண்ணாமலை வழக்கமாக பாஜக கொடி இருக்கும் காரிலேயே பயணிப்பார். ஆனால், இந்த முறை அண்ணாமலை பயணித்த காரில் பாஜகவின் கொடி இல்லை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
