”முதலமைச்சர் ஸ்டாலின் நலம்பெற கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்..” ஒன்றாக வாழ்த்திய அண்ணாமலை, குஷ்பு
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்தியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அவர் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழ்நாடு பாஜக சார்பாக இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்க இருந்தார்.
இதனிடையே தொடர் பணிகள் காரணமாக முதலமைச்சருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அவர், ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வீட்டில் ஓய்வு
நேற்று "மகுடம் மறுத்த மாமன்னன்" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அமைச்சர் துரைமுருகன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். மருத்துவர்கள் அறிவுரைப்படி முதலமைச்சர் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது. "முதலமைச்சர் 20ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், 21ம் தேதி வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ள நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகிறது. இவற்றிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளில் நடைபெறும் என கூறப்படுகிறது.
Recommended Video

அண்ணாமலை, குஷ்பு ட்வீட்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் பெற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். முதலமைச்சர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழ்நாடு பாஜக சார்பாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மரியாதைக்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் வேகமாக நலம்பெற வாழ்த்துகிறேன். சீக்கரம் நலம்பெற்று வாருங்கள் சார்." என்று வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications