TN Budget 2021: நிலத்துக்கான EC- வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி ஈசி-1950 முதலே ஆன்லைனில் கிடைக்கும்!
சென்னை: நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ்களை இனி 1950-ம் ஆண்டு முதலே தமிழக அரசின் இணையதளமான https://tnreginet.gov.in/portal-ல் பார்க்கலாம் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்- நிதிநிலை அறிக்கையை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதில், நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள்-Encumbrance certificate குறித்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. அதாவது தற்போது நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள் 1975-ம் ஆண்டு முதல்தான் https://tnreginet.gov.in/portal-ல் இணையதளத்தில் கிடைக்கும்
அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான ஆவணங்களை பத்திரப் பதிவு - சார்பதிவாளர் அலுவலகங்களில் கட்டணம் செலுத்திதான் பெற முடியும். தற்போது 1950-ம் ஆண்டு முதலே உங்கள் நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழை https://tnreginet.gov.in/portal-ல் இணையதளத்தில் பெற முடியும் என அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்.
https://tnreginet.gov.in/portal-ல் வில்லங்க சான்று விவரம் என்ற லிங்க்கை கிளிக் செய்து உங்கள் மாவட்டம் எந்த மண்டலத்தில் வருகிறது, உங்கள் மாவட்ட விவரம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை தேர்வு செய்து ஆரம்ப நாள் என்ற பகுதியில் 1950-ம் ஆண்டில் ஒரு மாதத்தையும் நாளையும் தேர்வு செய்து எந்த தேதி வரையில் பார்க்க வேண்டும் என்பதை முடிவு நாள் பகுதியில் குறிப்பிட்டு உங்கள் கிராமம், சர்வே எண் (புல எண்), உட்பிரிவு ஆகியவற்றை பதிவிட்டால் வில்லங்க சான்றிதழ் வந்துவிடும்.
பொதுவாக புதியதாக நிலம், மனை வாங்குவோர் வாங்கக் கூடிய சொத்து குறித்து வில்லங்கங்களை ஆராய்வது கட்டாயம். அதேபோல் நிலம், மனைகள் பதிவுகளுக்கு வில்லங்க சான்றிதழ்கள் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். அதனால் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் வில்லங்க சான்றிதழ்களை இனி 1950-ம் ஆண்டு முதலே இணையத்தில் பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் 29 துறைகளின் 600க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் இனி இணையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் எனவும் இது வரும் டிசம்பருக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். https://www.tnesevai.tn.gov.in/ என்ற அரசு இணையதளத்தில் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பல்வேறு உரிமங்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையையும் இனி விரிவுபடுத்தி இருப்பதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது தவிர்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications