மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிடும் முதல்வர் விஜய்?
சென்னை: தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தவெகவினரும் கூடுதல் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தகுதியுள்ள மகளிருக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ,.1,000 திட்டம் அமலுக்கு வந்தது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகளால் கொண்டு செல்லப்பட்டது. இந்த திட்டத்தை பல்வேறு அரசுகளும் விரிவாக்கம் செய்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான உரிமைத் தொகையாக ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தவெக ஆட்சியில் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
இதனால் தவெக அரசு சார்பாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்த்தி வழங்கப்படும் அறிவிப்பை முதல் பட்ஜெட்டிலேயே முதல்வர் விஜய் வெளியிடுவார் என்று மகளிர் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல் தவெக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட குடும்பத்திற்கு 6 சிலிண்டர் திட்டம், உயர்கல்வி மாணவர்களுக்கான திட்டம் உள்ளிட்டவை குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றாவது முதல் பட்ஜெட்டிலேயே இடம்பெறும் என்று தவெகவினர் ஆர்வமாக இருக்கின்றனர். ஒருவேளை போதுமான நிதி இல்லை என்றால் கூட, மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின், ஸ்டாலின் முதல் கையெழுத்தாக விடியல் பேருந்து திட்டத்தை செயல்படுத்தினார். அதே பாணியில் முதல் பட்ஜெட்டிலேயே இந்த திட்டத்தை விஜய் விரிவாக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
