3 அமைச்சர்கள் பதவி பறிப்பா? தமிழக அமைச்சரவையில் மாற்றமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்
சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தற்போது உள்ள 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிதாக சிலர் அமைச்சர் பதவியினை பெறலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், உங்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக பரவும் தகவலுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வருகிறது. முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் மொத்தம் 31 துறைகளுக்கு தவெக அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். தவெகவுக்கு ஆதரவு அளித்த மற்றும் கூட்டணி அமைத்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.

அமைச்சரவையில் மாற்றமா?
காங்கிரஸ் கட்சியில் 2 அமைச்சர்களும், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர்களும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது இப்போது உள்ள அமைச்சர்களில் 3 பேர் நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு புதிதாக மதுரையை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.
குறிப்பாக முதல்வர் விஜய் தன் வசம் உள்ள ஒரு துறையை வேறு ஒரு அமைச்சருக்கு ஒதுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்ததால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிந்த பிறகே அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் ராஜ்மோகன் பதில்
இதற்கு பதில் கூறிய ராஜ்மோகன், "இல்லை.. இல்லை.. அமைச்சரவையில் மாற்றம் என நிறைய ஊகங்கள் தான் கிளம்பியுள்ளது. ஆனால் தளபதி விஜய் அவர்கள் பார்த்து பார்த்து எல்லாருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்காரு. எங்கள் எல்லாத்துக்கு பொன்னான ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க.. எங்களுடைய உணவுத்துறை அமைச்சரை பாருங்க.. அந்த டிப்பார்ட்மெண்டையே கரைத்து குடித்துள்ளார். இப்போ கேட்ட எல்லா கேள்விக்கு டக்கு டக்குனு பதில் அளித்தார்.
அப்படி எனக்கு பள்ளிக் கல்வி.. என எல்லாருக்கும் பார்த்து பார்த்து பதவி கொடுத்துள்ளார். எல்லா துறையுமே மக்களுக்கு பணி செய்யும் துறை தான்.. எனவே முதல்வர் விஜய் எல்லாத்தையும் பார்த்து பார்த்து சரியான முடிவுகளை எடுப்பார்" எனக் கூறினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், உங்களுக்கு நகராட்சி நிர்வாகத் துறை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல் பரவுவதாக கேள்வி எழுப்பினார். உடனே பதிலளித்த ராஜ்மோகன்.. "ஏங்க.. ஏங்க.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க" என பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications
