மதுரையே மாறப்போகுது.. 2 மேம்பால பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் - நெடுநாள் கோரிக்கையாமே
சென்னை: முத்துராமலிங்க தேவர் குருபூஜை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை சென்று உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்துக்கு அவரது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவா்கள் மதுரைக்கு வர இருப்பதை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் ட்ரோன் கேமராக்களை இயக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனா்.
இதனை அடுத்து, மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் ட்ரோன் கேமராக்களை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவை கண்காணிக்க காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது." என்றாா். நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், அரசு விருந்தினா் மாளிகையில் தங்கினார்.
இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிலையின் கீழே வைக்கப்பட்டு இருந்த முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கும் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
அதை தொடர்ந்து சிவகங்கை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே நடைபெற இருக்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், கோரிப்பாளையம் மேம்பாலம் மற்றும் அப்போலோ சந்திப்பு உயா்மட்ட பாலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைக்க வைத்து உள்ளார். ரூ.340 கோடி மதிப்பிலான இந்த பாலங்கள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவும். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு காணொலி காட்சி மூலமாக திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதற்கு கடந்த ஏப்ரல் மாதம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அனுமதியளித்தது. அதை தொடர்ந்து அப்போலோ உயர்மட்ட மேம்பாலம் ரூ.150.28 கோடி நிதியும், கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு ரூ.190.4 கோடி நிதியும் தேவை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற மக்களின் கேள்விக்கு இன்று விடை தரும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலினே கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பின் மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள மருதுபாண்டியா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள, முதலமைச்சர் ஸ்டாலின் அதன் பிறகு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்குப் புறப்பட்டு சென்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications