சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ 22 ஆயிரமாக உயர்வு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ 22 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் ரூ 12 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் சுதந்திர தின விழா உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
79 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். அது போல் தமிழகத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.

சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்... இதை தலை நிமிர்ந்து பாட தியாகம் செய்த தியாகிகளுக்கு வணக்கம் தெரிவித்து என் உரையை தொடங்குகிறேன்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் என் விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலை வீரர்கள், அவரது குடும்பத்தினரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் விடுதலை வீரர்களை போற்றுவோம். தேசிய கொடியை நான் மட்டுமல்ல, அனைத்து மாநில முதல்வர்களும் இந்தநாளில் ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை 1974 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
இந்த முறை இந்த தேசியக் கொடியை ஏற்றி வைக்க வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என தலைவர்கள் கனவு கண்டனர். தியாகிகளைத் தொடர்ந்து போற்றி வரும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு உள்ளது.
வஉசி மறைந்த நாள் தியாக திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடலூரில் அஞ்சலை அம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ 20 ஆயிரம் ஓய்வூதியமாகவும் அவரது குடும்பத்தினருக்கு ரூ 10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கி வருகிறோம். தற்போது தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ 22 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. கட்டபொம்மன், வஉசி வழித்தோன்றல்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ 11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கான நிதியுதவி ரூ 15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ 8 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்து உச்சத்தை தொட்டிருக்கிறது. நாட்டிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் திகழ்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியே 6.5சதவீதமாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சி 11.19 சதவீதமாக உள்ளது. எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. தமிழகத்தில் 1.43 சதவீதம் மக்கள்தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.
ஸ்டார்ட் அப் தர வரிசையில் 2018ஆம் ஆண்டு கடைசி இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதலிடத்தில் உள்ளது. ஜவுளி, தோல் பொருட்களின் ஏற்றுமதியில் முதன்மையான மாநிலமாக உள்ளோம்.
ஒற்றை துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக உள்ளது. அனைத்து மாவட்டங்களும் அனைத்து மக்களும், சமூகப்பிரிவும் வளர்வதை நீங்கள் பார்க்கிறீர்கள். இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார். இந்த உரையில் மொத்தம் 9 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications