தயாளு அம்மாள் உடல்நிலை எப்படி? வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தற்போது கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு வயது 92. வயது மூப்பு காரணமாக அவருக்கு நேற்று முன்தினம் இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கருணாநிதி குடும்பத்தினர் பலரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
தயாளு அம்மாளுக்கு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், செல்வி, மு.க.தமிழரசு என நான்கு பிள்ளைகள். அவரை பார்ப்பதற்காக வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் மருத்துவமனையிலேயே இருந்து, அதன்பின் வீட்டுக்கு புறப்பட்டனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்த்தார்.
தயாளு அம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. நேற்று தயாளு அம்மாளின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.
தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications