"ஒன்றிய அரசு.." மோடி முன்னிலையில் "அழுத்தி" சொன்ன முதல்வர் ஸ்டாலின்! என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பயன்படுத்தினார்.
Recommended Video
தமிழ்நாட்டில் இன்று 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். நேரில் வந்து திறப்பதாக இருந்த நிகழ்வு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் நிகழ்வாக மாற்றப்பட்டது. இதனால் டெல்லியில் இருந்தபடியே பிரதமர் மோடி 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டில் திறந்து வைத்தார்.
இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி உரை
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழியான தமிழில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சொந்த தொகுதியான வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்காக சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு தமிழ் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும்.ஐ.நா சபையில் தமிழில் பேசியது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.

தமிழ் மோடி
நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது எனக் கூறிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 54% அதிகரித்துள்ளது எனவும், 2014-ம் ஆண்டு நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள்தான் இருந்தன எனவும் நாட்டில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கபட்டுள்ளது எனக் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு சார்பாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்பட்ட பின் முதல்முறையாக அரசு விழா ஒன்றில் பிரதமர் கலந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதற்கு காரணம் கிராமப்புற மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க முடிந்ததால்தான். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும்.

தமிழ்நாடு நீட்
மருத்துவ படிப்பில் ஏற்கனவே இருந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முன் நடத்தப்பட்டது போல அட்மிஷன் நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு வைக்கும் கோரிக்கைகளை இந்திய பிரதமரும், ஒன்றிய அரசும் நிறைவேற்றித் தர வேண்டும். தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஒன்றிய அரசு
இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர், ஒன்றிய அரசு என குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். மத்திய அரசு என்ற பதத்தை பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். பாஜக தலைவர்கள் இந்த பதத்தை விரும்புவது இல்லை. பாஜக தலைவர்கள் பலர் ஒன்றிய அரசு என்ற பதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசு என்று சொல்வது தவறு இல்லை.

ஒன்றிய அரசு ஸ்டாலின்
ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகம் தவறு கிடையாது. அரசியலமைப்பு சட்டத்திலேயே இப்படித்தான் இருக்கிறது. நமது அரசியலைப்பு சட்டத்தின் முதல் பக்கத்திலேயே இப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து , 'ஒன்றிய அரசு' என அழைத்து வருகிறது. இது தேசிய அளவில் கவனமும் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்றும் முதல்வர் ஸ்டாலின் பல முறை ஒன்றிய அரசு என்ற பதத்தை பயன்படுத்தி பேசியது கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications