வெளிநாடு பயணம் முடிந்த கையோடு விருதுநகர் போகும் முதல்வர் விஜய்? பிளான் என்னவாம் தெரியுமா?
சென்னை: 4 நாட்கள் பயணமாக வரும் 10 ஆம் தேதி பிரிட்டன் செல்லும் தமிழக முதல்வர் விஜய், 16 ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் செல்லும் முதல்வர் விஜய், 17 ஆம் தேதி விருதுநகர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. காமராஜர் படித்த கேவிஎஸ் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தினை விஜய் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது. எனினும் அவரது பயண திட்டம் இன்னும் உறுதியாகவில்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டம், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த மதிய உணவு திட்டத்தை போல காலை உணவு திட்டத்தை கடந்த திமுக ஆட்சியில் அப்பொதைய முதல்வர் ஸாடாலின் அறிமுகம் செய்தார்.

காலை உணவுத் திட்டம்
ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று தவெக அரசு மாற்றியது அதோடு, திட்டத்தினையும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் வரை பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
காமராஜர் படித்த கேவிஎஸ் பள்ளி
விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த காலை உணவு திட்டம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாளான அன்று இந்ததிட்டத்தினை தமிழக அரசு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்மூலம் தமிழகத்தில் சுமார் 15,14,274 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.
விருதுநகரில் காமராஜர் படித்த கேவிஎஸ் பள்ளியில் தொடங்கி வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தினை முதல்வர் விஜய் நேரில் சென்று விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய் பயண திட்டம் இன்னும் உறுதி செய்யப்படாவிட்டாலும், அவர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லபப்டுவதால் விருதுநகர் மாவட்டம் மற்றும் கல்வித்துறையினர் ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அதே நாளில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விருதுநகருக்கு வருகை தர திட்டமிட்டு இருக்கும் விஜய், அங்கு செல்வாரா? என்று தெரியவில்லை. ஏற்கனவே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த சூழலில் விஜய் சென்றால், அவரை பார்க்கவும் தவெகவினர் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால், இதற்கான வாய்ப்பு குறைவு என்றே தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய் வரும் 10 ஆம் தேதி பிரிட்டன் செல்கிறார். பிரிட்டனில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். பிரிட்டன் பயணத்தை முடித்துவிட்டு 16 ஆம் தேதிதான் தமிழ்நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விஜய்யின் விருதுநகர் பயணம் உறுதி செய்யப்பட்டால், வெளிநாட்டு பயணம் முடிந்த கையோடு, அவர் விருதுநகருக்கு செல்வது உறுதியாகும்.


Click it and Unblock the Notifications
