புழல் சிறையில் விஜய்யின் அவசர விசிட்.. காரணம் ஜோசியர் சொன்ன பரிகாரம்.. அதிர்ச்சி தரும் பின்னணி!
சென்னை: சென்னை புறநகரில் அமைந்துள்ள நாட்டின் முக்கிய சிறை வளாகங்களில் ஒன்றான புழல் மத்திய சிறைக்கு முதல்வர் விஜய் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளின் வாழ்வாதார நிலை, அடிப்படை உரிமைகள், மருத்துவ வசதிகள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவுத் தரம் ஆகியவற்றை நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.
புழல் மத்திய சிறை-1 வளாகத்திற்குச் சென்ற முதல்வர், தனிமைப்படுத்தப்பட்ட வார்டு , பார்வையாளர் அரங்கு, சிறை மருத்துவமனை, போதை மீட்பு மையம், நூலகம், கணினி பயிற்சி மையம், மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரி வகுப்பறைகள், உயர் பாதுகாப்பு பிரிவு மற்றும் தூக்கு மேடை பகுதி வரை நேரில் பார்வையிட்டார். கைதிகள் தயாரிக்கும் காய்கறி அடுக்கு அலமாரிகள், காகித உறைகள், விசைத்தறி மற்றும் தையல் பிரிவுகளையும் பார்வையிட்ட அவர், உணவு சமைக்கும் இடத்திற்குச் சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

கைதிகளிடம் நேரடியாகப் பேசிய முதல்வர், அவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்தார். பெரும்பாலானோர் சூழ்நிலை கைதிகளாகவே இங்கு இருப்பதாகவும், தவறு செய்வதற்கும் திட்டமிட்ட குற்றத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், சிறைவாசிகள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள வாசிப்புப் பழக்கத்தையும் தொழிற்கல்வியையும் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதே வேளையில், சிறைக் காவலர்கள் தங்கள் நீண்டகால பதவி உயர்வு தாமதங்கள் குறித்து முதல்வரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சிறை ஆய்வை முடித்த கையோடு, அருகிலுள்ள M-3 புழல் காவல் நிலையத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றார். காவல்துறையின் உயர் அதிகாரிகளான கூடுதல் மற்றும் துணை ஆணையர்கள், டிஜிபி அந்தஸ்திலான அதிகாரிகள் அருகில் நின்று கொண்டிருக்க, எதிரே அமர்ந்தபடி காவல் நிலைய தினசரி செயல்பாடுகள், வழக்குப் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் லாக்-அப் வசதிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
ஜோதிடப் பரிகாரமா? - பரபரக்கும் பின்னணி
வெளிப்பார்வைக்கு இது வழக்கமான அரசு நிர்வாக ஆய்வு போல் தெரிந்தாலும், முதல்வரின் உள்வட்டாரங்களில் வேறுவிதமான தகவல்கள் கசிந்து அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. இந்த ஆய்வுகள் அனைத்தும் ஒரு திட்டமிட்ட ஜோதிடப் பரிகாரத்தின் பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், தற்போதைய கிரக நிலைகள் அவருக்குக் கடுமையான சோதனைக் காலத்தை உணர்த்துவதாக எச்சரித்துள்ளனர். ராமபிரானின் வனவாச காலத்திற்கு இணையான கடுமையான சட்டப் போராட்டங்கள், தேவையற்ற சர்ச்சைகள் அல்லது சிறைவாசம்/காவல் நிலைக்குச் செல்லக்கூடிய கிரக சேர்க்கைகள் தென்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இத்தகைய தீய கிரகப் பார்வைகளை முன்கூட்டியே திசைதிருப்ப, சிறைச்சாலை மற்றும் காவல் நிலையங்களுக்குச் சென்று வருவது ஒரு அடையாளப் பரிகாரமாக பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த காலக்கட்டத்தில் பலத்த சோதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வழக்குகள், எதிர்ப்புகள், கடன் மற்றும் சட்டச் சிக்கல்களைக் குறிக்கும் 6-ஆம் பாதம் வலிமை பெறும் சூழலில், குருவின் பார்வை ஜென்ம லக்னத்தின் மீது விழுந்தால் அரசியல் மற்றும் தொழில் தளங்களில் தேவையற்ற பழிகள், சட்ட ரீதியான நெருக்குதல்கள் மற்றும் சிறைவாசம் போன்ற நெருக்கடிகள் எழக்கூடும்.
நிஜ வாழ்க்கையில் சட்ட ரீதியான பிடிக்குள் சிக்குவதற்கு முன்பாக, தாமாகவே முன்வந்து காவல் நிலையம் மற்றும் சிறைச்சாலைக்குள் காலடி எடுத்து வைத்து வருவது, அந்த எதிர்மறை கிரக தோஷங்களை மட்டுப்படுத்தும் ஒரு பாரம்பரிய சூட்சும பரிகார முறையாகக் கருதப்படுகிறது. நிர்வாக ரீதியிலான கள ஆய்வு என்ற பெயரில், இந்த சூட்சும பரிகாரமே அமைதியாக நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அரசியல் மற்றும் ஜோதிட வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
