நாங்க ஆட்சியில் பங்கு கேட்டிருந்தால் திமுக கொடுத்திருக்கும்.. செல்வப்பெருந்தகை பேட்டி!
சென்னை: விஜய்யின் அரசியல் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறவே விஜய்யின் அரசியல் பிரவேசம் உதவும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. யார் சலனத்தோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தலாம். நாங்கள் உறுதியாக இருக்கிறோம். விஜய்யின் அரசியல் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறவே விஜய்யின் அரசியல் பிரவேசம் உதவும்.

தவெக மாநாடு, விஜய்யின் பேச்சால் இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை. விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது? ராகுல் காந்தி வந்தபோது அதிக கூட்டம் கூடியது. கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை. அவர்கள் தான் முடிவெடுப்பார்கள்.
2006ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்றைக்கு தமிழக முதல்வராக கலைஞர் இருக்கவேண்டும் என நிபந்தனை இன்றி ஆதரவு கொடுத்தார் சோனியா காந்தி. அன்றைக்கு ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டிருந்தால் திமுக கொடுத்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் கட்சி தொடங்கியதாக ஒரு பேச்சு உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். "யார் சொல்லி நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள்?" என விஜய்யிடம் கேளுங்கள்" எனக் கூறினார் செல்வப்பெருந்தகை.
"நம்மை நம்பி, நம் செயல்பாட்டை நம்பி நம்மளோடு சிலர் வரலாம் இல்லையா, அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா, அப்படி வருபவர்களையும் நாம் அன்போடு அரவணைக்க வேண்டும் இல்லையா, நமக்கு எப்போதுமே நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்து தானே பழக்கம். அதனால், நம்மை நம்பி, நம்மோடு இணைந்து களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்"" என்று நடிகர் விஜய், அண்மையில் நடந்த தவெக மாநாட்டில் பேசியது அரசியல் அரங்கில் விவாதத்தீயை மூட்டியுள்ளது.
விஜய்யின் இந்த பேச்சுக்கு, வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வரவேற்பு தெரிவித்தார். விஜய்யின் பேச்சு, தனக்கு பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதிவிட்ட நிலையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. இதனால், காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications