தேவர் குரு பூஜை.. வரலாற்றில் முதல் முறையாக.. டிஜிபி அலுவலகத்திலிருந்து போலீஸாருக்கு கடிதம்!
சென்னை: தேவர் குருபூஜை விழாவின் போது பல்வேறு இடங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழாவும் 63 ஆவது குரு பூஜை விழாவும் கடந்த அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 தேதிகளில் நடைபெற்றது.ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன், மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேவர் ஜெயந்தி நடத்தப்பட்டது. அது போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

அரசியல் கட்சித் தலைவர்கள்
தேவர் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பசும்பொன் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் விழாக்கள் பாதுகாப்பாக முடிந்தது.

தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகம்
இந்த நிலையில் தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகம் தேவர் ஜெயந்தி விழா குறித்து இன்றைய தினம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் வரலாற்றில் முதல்முறையாக தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன், மதுரை கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை.

டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி தாமரைக் கண்ணன், மதுரை மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான 34 எஸ்பிக்கள் மேற்பார்வையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ட்ரோன்கள், பதற்றமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணி
டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி தாமரைக் கண்ணன் ஆகியோர் பசும்பொன்னில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அவ்வப்போது காவல் துறை அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சிறப்பாக செயல்பட்டதால் இந்த ஆண்டு சிறியதொரு வன்முறை சம்பவங்கள் கூட நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

மோதல் தணிந்தது
தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகங்களான தேவர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு மோதல் போக்கும் பதற்றமான சூழலும் நிலவி வந்தது. இமானுவேல் சேகரன் குருபூஜையின் போதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போதும் அசம்பாவிதங்களோ கலவரங்களோ நடந்து விடக் கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்படுவர். 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் அண்மைகாலமாகவே இரு சமூகத்தினரிடையே மோதல் போக்கு குறைந்து பரஸ்பரம் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். இமானுவேல் குருபூஜைக்கு தேவர்கள் வாழ்த்து சொல்வதும் தேவர் குருபூஜைக்கு தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்த்து சொல்வதுமாக இருக்கிறார்கள். மேலும் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் இருவரும் இணைந்திருக்கும் போஸ்டர்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் நடந்த சில வன்முறை சம்பவங்களை மனதில் வைத்துதான் இந்த ஆண்டும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் சுமூகமாக நடந்ததைத்தான் டிஜிபி சைலேந்திர பாபு சுட்டிக் காட்டியுள்ளார் .












Click it and Unblock the Notifications