குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4ஐ பாஜக பக்கம் ஒதுக்கி இருப்பதால், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோவு ஆகிய 4 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி இருப்பதால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு 4 தொகுதிகளையும், பாஜகவுக்கு 3 தொகுதிகளை கொடுத்திருக்கலாம் என்று ரத்தத்தின் ரத்தங்களே புலம்பி வருகின்றனர். இதன் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக வலிமை அதிகரிக்கும் என்பதோடு, அதிமுக தொண்டர்களையும் சோர்வடைய வைத்திருக்கிறது. இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்கு லோக்சபா தேர்தல் முடிவுகளே காரணம். ஏனென்றால் லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்தது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அதிமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் பசிலியான் நஸ்ரத் வெறும் 41 ஆயிரம் வாக்குகளையே பெற்றார்.
ஆனால் பாஜக சார்பாக போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் சுமார் 3.66 லட்சம் வாக்குகளை கைப்பற்றினார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக போதுமான கவனம் கொடுக்கவில்லை என்றும் பார்க்கப்படுகிறது. அதனை கணக்கில் வைத்து பாஜக காய் நகர்த்த, எடப்பாடி பழனிசாமியும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.
இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமாக அதிமுகவின் அடிப்படையையே காலி செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமடைந்து வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்படியான ஒரு முடிவை எடுத்திருப்பது அக்கட்சி தொண்டர்களை கூடுதல் அதிருப்தி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications