விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக!
சென்னை: திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ள விசிகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை மாலைக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, அடுத்தக் கட்டமாக வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சுமார் ஒரு மாதமாக திமுக தலைமை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஐயூஎம்எல் 2, மமக 2, காங்கிரஸ் 28, மதிமுக 4, கொமதேக 2 உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இன்று காலை சிபிஐ கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு வழியாக கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது. இன்னும் சிபிஎம், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கையை முடிவு செய்து ஒப்பந்தம் கையெழுத்து போடுவதை திமுக தீவிரமாக்கி இருக்கிறது.
விசிகவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சிபிஎம் கட்சிக்கு மீண்டும் 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாளை விசிகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் தேமுதிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி, மஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கட்சிகள் பெரும்பாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3 தொகுதிகளை கொடுக்க திமுக முன் வந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் திமுக தரப்பில் சுமார் 160 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சிறிய கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்பதால், சுமார் 170 தொகுதிகள் வரை உதயசூரியன் சின்னம் போட்டியில் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications