போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு!
சென்னை: 2021 சட்டசபைத் தேர்தலில் போளூர் தொகுதியில் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இம்முறை கலசப்பாக்கம் தொகுதிக்கு மாறி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதன் பின்னணியில் அமைச்சர் எவ வேலு இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று காலை வெளியிட்டது. 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் 3 முன்னாள் அமைச்சர்கள் தொகுதி மாறி இருக்கிறார்கள். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சிவி சண்முகம், இம்முறை மைலம் தொகுதிக்கு மாறி இருக்கிறார்.

அதேபோல் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி, இம்முறை சிவகாசி தொகுதிக்கு மாறியுள்ளார். இவர்கள் இருவருமே கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஆனால் போளூர் தொகுதியில் போட்டியிட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி சுமார் 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் இம்முறை கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் போளூர் தொகுதி பாமக வசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக வென்ற தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏ-க்களே போட்டியிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்தார். ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொந்த தொகுதிக்கு செல்லும் முடிவை எடுத்ததால், எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தொகுதி மாற்றத்திற்கு அமைச்சர் எவ வேலுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த சட்டசபைத் தேர்தலில் போளூர் தொகுதி திமுக பொறுப்பாளராக எவ வேலு மகன் கம்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் போளூர் தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.
இதனால் எவ வேலு தனது மகனுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பேசி தொகுதி மாற வைத்திருப்பதாக சில பேச்சுகள் எழுந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் எவ வேலு கட்சி சார்பின்றி அனைவரிடமும் பழகக் கூடியவர். சில மாதங்களுக்கு முன் தவெக மாவட்டச் செயலாளர் கிரக பிரவேச நிகழ்ச்சியில் கூட பங்கேற்றிருந்தார்.
இதனால் எவ வேலு மகனுக்காக அதிமுக முன்னாள் அமைச்சரும் தனது தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதாக முணுமுணுக்க தொடங்கி இருக்கின்றனர். இருப்பினும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி வந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும். இதனால் திருவண்ணாமலையில் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு தொகுதியில் திமுக வென்றுவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications