8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன?
சென்னை: திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் 8 தொகுதிகள் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் திமுக சீனியர்களோ விசிகவை 6 தொகுதிகளுக்கு இழுக்க முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இறுதியாக 7 தொகுதிகளில் விசிக உடனான தொகுதி பங்கீடு நிறைவடையும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையில் சுமார் 22க்கும் அதிகமான கட்சிகள் கூட்டணியில் உள்ளன. கடந்த தேர்தலை விடவும் இம்முறை தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் திமுக பக்கம் வந்துள்ளன. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதில் திமுக மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது.

ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது. அடுத்தக் கட்டமாக சிபிஎம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில், விசிக உடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது.
முதல்வர் ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனிடையே விசிக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் சிலர் தகவல் பகிர்ந்துள்ளனர். அதன்படி இரட்டை இலக்க தொகுதி எண்ணிக்கை என்ற கோரிக்கையை கைவிட்டு, 8 தொகுதிகள் என்ற கோரிக்கையை விசிக கையில் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் திமுக சீனியர்களோ மீண்டும் 6 தொகுதிகள் என்றே பேச்சுவார்த்தையை நடத்தி வந்திருக்கின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்படக் கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றது. அதேபோல் கடந்த லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 2லும் வென்றது. திமுக சீனியர்கள் 1 லோக்சபா தொகுதிக்கு 3 தொகுதிகள் என்ற ரீதியில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதனால் திமுக சீனியர்கள் 6 தொகுதிகள் என்றே பேசி வருகின்றனர். இதனால் நாளைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications