2026 தமிழகத் தேர்தல்: திமுக-வை விட அதிமுக + தவெக அதிக சீட் முன்னிலை.. தமிழகத்தில் தொங்கு சட்டசபையா?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்கள் எவரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய திருப்பத்தை நோக்கித் தமிழகத்தை இட்டுச் செல்கின்றன. ஆளுங்கட்சியான திமுக முன்னிலையில் இருந்தாலும், ஒருவேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை' சூழல் உருவானால் என்ன நடக்கும்? நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக ஆகிய இரண்டு அணிகளும் ஒரே எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருவது அரசியல் சதுரங்கத்தில் ஒரு புதிய அதிரடி மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறதா? இதன் பின்னணி குறித்த முழு விவரம் இதோ.
இன்று காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத் தேர்தல் களம் மிகக்கடுமையான மும்முனைப் போட்டியைச் சந்தித்து வருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தபால் வாக்குகள் மற்றும் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணி 54 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 32 இடங்களிலும், அறிமுகக் கட்சியான விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 32 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் தவெக திமுகவை முந்தியது.

தற்போதைய சூழலில், திமுக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை திமுக பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கைக்குக் கீழே நிறுத்தப்பட்டால், 2026 சட்டமன்றத்தில் 'தொங்கு சட்டசபை' அமையும் சூழல் உருவாகும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜய் உருவெடுப்பார். தற்போதைய நிலவரப்படி அதிமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகளின் முன்னிலையைச் சேர்த்தால் அதிக இடங்கள் வருகின்றன. வரும் மணிநேரங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்தால், திமுக ஆட்சியைத் தக்கவைப்பது பெரும் போராட்டமாகிவிடும்.
தமிழக அரசியலில் இதுவரை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்று பெரும்பான்மை பெற்றுவிடும். ஆனால், இன்று காலை நிலவரப்படி விஜய் தனது வாக்குகளை மிக வலுவாகப் பிரித்துள்ளார். இதனால் ஆட்சி அமைப்பதில் அவரே 'கிங் மேக்கராக' மாறக்கூடும். அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் அது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும்.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் வலுத்து வரும் நிலையில், இந்த 9 மணி நிலவரம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்கான விதையைத் தூவியுள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த முன்னிலை நிலவரம் மாறுமா அல்லது தமிழகம் ஒரு புதிய அரசியல் கூட்டணியைக் காணப்போகிறதா என்பது மதியத்திற்குள் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications
