என்னங்க சொல்றீங்க.. களமிறங்கும் டெல்லி? திமுகவை உடைத்து அதிமுக - பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பா?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெளிவந்துள்ள முன்னிலை நிலவரங்கள் தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கியே சிக்னல் கொடுக்கின்றன. தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் தற்போது அதிகம் உள்ளது.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) 109 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியான திமுக வெறும் 52 இடங்களிலும், அதிமுக 69 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தச் சூழலில், தமிழக அரசியலில் ஒரு புதிய பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக ஆட்சியைப் பிடிப்பதற்கான ரகசியத் திட்டங்களைத் தீட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஸ்டாலினின் பின்னடைவும் திமுகவின் கலக்கமும்
அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் தொகுதியில் தத்தளித்து இப்போதுதான் 1000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிகிறது. கட்சியின் மிக உயரிய தலைவர்களே தோல்வியின் விளிம்பில் இருப்பதால், திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆட்சி அதிகாரம் கைவிட்டுப் போகும் சூழலில், திமுகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சிக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, "டெல்லி" மற்றும் "பாஜக" தலைமையின் உதவியுடன் திமுகவை உடைக்கும் வேலைகளில் அதிமுக இறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
2/3 பங்கு எம்.எல்.ஏ-க்கள்: கட்சித் தாவல் தடைச் சட்டத்தை முறியடிக்க திட்டம்?
அரசியல் சட்டப்படி, ஒரு கட்சியின் எம்.எல்.ஏ-க்களைத் தனியாகப் பிரித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) பாயும். ஆனால், மொத்த எம்.எல்.ஏ-க்களில் 2/3 பங்கு உறுப்பினர்களை உடைத்துக் கொண்டு வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.தற்போது திமுக 50-60 இடங்களுக்குள் சுருங்கி வரும் நிலையில், அதில் கணிசமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ-க்களை வளைப்பது அதிமுக போன்ற அனுபவம் வாய்ந்த கட்சிக்கு சாத்தியமான ஒன்றுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே டெல்லி மேலிடத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் அதிமுக, பாஜவின் ஆபரேஷன் தாமரை உத்திகளைப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமரத் துடிக்கிறது.
தமிழக வெற்றி கழகத்திற்கு முட்டுக்கட்டை?
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 109 இடங்களுடன் பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) மிக அருகில் உள்ளது. ஆனால், இன்னும் 9 இடங்கள் குறைவாக இருப்பதால், அவர்களால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, அதிமுக + பாஜக கூட்டணி மற்றும் திமுகவில் இருந்து பிரியும் ஒரு குழுவை ஒன்றிணைத்து ஆட்சி அமைய வாய்ப்புகள் உள்ளன.
அரசியல் நோக்கர்களின் கருத்து
"திமுகவில் பல அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியைத் தழுவும் நிலையில், அக்கட்சிக்குள் தலைமை குறித்த அதிருப்தி எழலாம். இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது. டெல்லியின் ஆசி இருந்தால் எதுவும் சாத்தியமே.
அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியம்
திமுகவின் கோட்டையான சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அக்கட்சி சரிவைச் சந்தித்துள்ளதால், தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருதி பல எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறத் தயார் நிலையில் இருக்கலாம் எனத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கனவே டெல்லி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி உடைக்கப்பட்டு, மற்றொன்று ஆட்சி அமைக்குமா? அல்லது தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள தவெக ஆட்சியைப் பிடிக்குமா? என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். எது எப்படியோ, இன்றைய தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் 50 ஆண்டுகால திராவிட அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications