ஏன், என்னாச்சு நம்ம பஸ் நடத்துநர்களுக்கு..? திடீருன்னு இப்படி வரிசை கட்டுதே.. என்ன செய்யலாம்?
சென்னை: மீனவ மூதாட்டி, நரிக்குறவ மக்களை அரசு பேருந்திலிருந்து நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துநர்... இப்படியாக தொடரும் நிகழ்வுகளுக்கு என்னதான் காரணம்? இதை தடுக்க வழி என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன்களை விற்ற பாட்டி ஒருவர் வியாபாரத்தை முடித்துக் கொண்டு அரசு பேருந்தில் ஏறினார். ஆனால் அங்கிருந்த நடத்துநர், மீன் வித்துட்டு வர்றியா.. பஸ் பூரா நாறும்.. இறங்கு இறங்கு னு சொல்லி அவரை மனசாட்சியே இல்லாமல் இறக்கிவிட்டார்.
இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்திருந்தார். அந்த சம்பவம் நடந்த சில நாட்களில் மற்றொரு சம்பவம் பக்கத்து மாவட்டமான நாகர்கோவில் மாவட்டத்தில்! அதில் அரசு பேருந்தில் ஏறிய நரிக்குறவ மக்கள் சிலரை நடுவழியில் இறக்கிவிட்டுவிட்டார்.

குடித்துவிட்டு பயணம்
இது போன்று அடுத்தடுத்து அரசு பேருந்து நடத்துனர்கள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்தில் குடித்துவிட்டு பயணம் செய்கிறார்கள், சிகரெட் பிடித்துவிட்டு பயணம் செய்கிறார்கள். குட்கா போட்டுக் கொண்டு துப்புகிறார்கள். அவர்களை எல்லாம் விட்டு விட்டு உழைக்கும் வர்க்கத்தினரை சிறுமைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.

கன்னியாகுமரி மீனவ சம்பவம்
கன்னியாகுமரியில் மீனவ மூதாட்டி இறக்கி விட்ட சம்பவத்தின் போதே வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கையுடன் வேறு பெரிய தண்டனை கொடுத்திருந்தால் இது போல் நாகர்கோவிலில் நடந்திருக்காது. வசதியானவர்கள் இரு சக்கர வாகனத்திலோ காரிலோ பயணம் செய்வர். ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள் பயன்படுத்தத்தான் அரசு பேருந்துகள் உள்ளன.

பிரச்சினை
அதில் மீன் வியாபாரிகளை ஏற்றுவதில் என்ன பிரச்சினை இவர்களுக்கு? அதே போல் மீன் வியாபாரிகள் உள்ளிட்ட ஏழைகளை பேருந்து நிறுத்தம் வந்தாலும் தள்ளி போய் நிறுத்துவது போன்ற சம்பவங்களை நடத்துநர்கள் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், கன்டக்டர் மீது புகார் அளிக்க சொல்லாம்.

நடத்துநர்கள்
அவ்வப்போது ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு வாராந்திர ஆலோசனை கூட்டத்தை அந்தந்த கிளை மேலாளர் தலைமையில் நடத்தி இனி இது போன்று சம்பவம் நடந்தால் பெரிய நடவடிக்கை பாயும் என எச்சரிக்கலாம். சிறை தண்டனை, அபராதம் வரை அதிகபட்சமாக செல்ல வேண்டும். அது போல் மீனவ மூதாட்டியையும் நரிக்குறவர்களையும் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதற்கு அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நடத்துநர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை வாங்கித் தருவது.. இவற்றையெல்லாம் செய்தால் சற்று பயம் இருக்கும்.

பேருந்து
அது போல் இன்னொரு சம்பவம் விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு ஒரு பேருந்து நடத்துநர் பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவமும் பகீர் கிளப்பியுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதை அண்மைக்காலமாக படித்து வருகிறோம். தற்போது அந்த வரிசையில் சில நடத்துநர்களும் சேர்ந்து விட்டார்கள். இவர்களை எச்சரித்து மேலாண் இயக்குநர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் விழுப்புரம் பேருந்தில் அத்துமீறல் - மாபெரும் தலைகுனிவு, போக்குவரத்துக்கழக வரலாற்றில் ஒரு கருப்பு நிகழ்வு என குறிப்பிட்டுள்ள அவர் , இனி இது போல் தவறு நிகழ்ந்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவர் என தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஒரு முறை
எதற்கு இது போன்று பூச்சாண்டி காட்ட வேண்டும்? இந்த சம்பவமே தவறுதானே. இதுவே ஒருவர் ஒருமுறையாவது தவறை செய்ய வழிவகுக்கிறது. பெண்ணை சீண்டினால் என்ன ஒரு அறிக்கை விடுவார்கள் அவ்வளவுதானே என்ற மனநிலைக்கு நடத்துநர்கள் வந்துவிடுவார்கள். இது போல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நடத்துநர்கள் தயவு தாட்சண்யம் பாராமல் நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும். கன்னியாகுமரி குளச்சலில் நிரந்தர பணிநீக்கம் செய்திருந்தால் இது போல் நாகர்கோவிலில் நடந்திருக்காது. எப்போதுமே தவறை திருத்த, வேண்டியது அறிவுரை அல்ல! எச்சரிக்கை அல்ல! தண்டனைதான்!












Click it and Unblock the Notifications