தமிழகத்தில் அதிகரித்த கிரைம்! ரெடியான Report! டெல்லியில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் தமிழக ஆளுநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு விவகாரம் தற்போது டெல்லி வரை எதிரொலித்து, மாநில அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த தொடர் கொலைகள், தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், மதுரையில் நகைக்கடை கொள்ளை என அடுத்தடுத்து நடந்த குற்றங்களால் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, ஆளுநர் ஆர்லேக்கர் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக நிலவரம் குறித்த தனது விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளார்.

Governor Arlekar

அமித் ஷாவிடம் ஆளுநர் வழங்கும் அறிக்கையில் என்ன இருக்கும்?

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடைபெற்ற முக்கியக் குற்றச் சம்பவங்கள், அவற்றின் பின்னணி மற்றும் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தில் ஒரே நாளில் 13 பேர் உட்பட 17 பேர் கொல்லப்பட்ட விவகாரம். மது மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வன்முறைகள். காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள். எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் திமுக ஆகியவை முன்வைத்துள்ள புகார்கள்.

ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை ஆளுநர் அமித் ஷாவிடம் வழங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஜம்மு - காஷ்மீரில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 15-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

ரகசிய அறிக்கையின் கோணம் என்ன? ஆர்வத்துடன் விசாரிக்கும் முதல்வர் விஜய்

இதற்கிடையே, டெல்லிக்கு ஆளுநர் அழைக்கப்பட்டதையும், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவர் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதையும் அறிந்த முதல்வர் விஜய், இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆளுநரின் உண்மையான யோசனை என்ன? மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து எந்தக் கோணத்தில் அவர் அறிக்கை தயாரித்திருக்கிறார்? அரசுக்கு எதிராகக் கடுமையான பரிந்துரைகள் ஏதேனும் அதில் இடம்பெற்றுள்ளதா? என்பதை அறிவதில் முதல்வர் விஜய் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே, ஆளுநரின் டெல்லி பயணத்திற்கு முன்னதாக, தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தலைமைச் செயலகத்தில் காவல்துறை மற்றும் உளவுத்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநர் அறிக்கையில் சுட்டிக்காட்ட வாய்ப்புள்ள விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவாதித்த முதல்வர், மாநிலம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை ஒடுக்க அதிரடி வேட்டை நடத்தி, சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதை நிரூபிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் ஆர்லேக்கர் இடையிலான இன்றைய சந்திப்பு, தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+