“செயல்முறை குறைபாடுதான்”.. தாம்பரம் டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு விளக்கம்!
சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பிலான 2 டெண்டர்களில் விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
முதல்வர் விஜய்யின் கீழ் செயல்படும் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள திட்டத்தில் டெண்டர் கோரப்படும் முன்பே பணிகளை முடித்து திறப்பு விழா நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. கூட்டுச் சதி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து கூட்டுச்சதி செய்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. சுமார் ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 2 பணிகளை, டெண்டர் செயல்முறை முடிவதற்கு முன்பே அதிகாரிகள் முடித்துள்ளனர் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
அதாவது அரசு விதிகளின்படி எந்தவொரு பொதுப்பணி திட்டத்திற்கும் முறையாக டெண்டர் கோரப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு டெண்டர் நடைமுறைகளே தொடங்காத நிலையில், விதிகளை முற்றிலும் புறந்தள்ளி அனைத்துப் பணிகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதே சமயம் பாலச்சந்தர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ஆர். சரண்யா, கூடுதல் பொறுப்பாகத் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பதவியைக் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிகழ்வில் அறப்போர் இயக்கத்தினரால் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களால் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தாம்பரம் மாநகராட்சியில் மண்டலம் 4-க்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் ரூ.18.60 லட்சம் மதிப்பீட்டில் நீர் சேமிப்பு சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்தல் பணி மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4-க்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் ரூ.27.30 இலட்சம் மதிப்பீட்டில் அசோகத் தூண் சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்துதல் பணி ஆகிய பணிகளுக்கு பொதுநிதி அல்லது சி.எஸ்.ஆர். (CSR) மூலம் செயல்படுத்தலாம் என 14.07.2026 அன்று மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 23.07.2026 அன்று மாநகராட்சி ஆணையரால் மேற்படி பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 24.07.2026 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்படி 2 பணிகளையும் செயல்படுத்தித் தருவதாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தால் மேற்கண்ட 2 பணிகளும் முடிக்கப்பட்ட போதிலும் 06.08.2026 அன்று ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வு செயல்முறை குறைபாடு என கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் பணியாணை ஏதும் வழங்கப்படவில்லை. மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து செலவினம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், செயல்முறை குறைபாடுகளுக்காக தாம்பரம் மாநகராட்சியின் தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி ஆணையர், பணியிலிருந்து அரசால் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வு தொடர்பான விரிவான விசாரணை நடத்துமாறு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு இழைத்த அனைத்து நபர்கள் மீதும் எவ்வித விடுபாடுமின்றி உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
