Thug Life: தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. நாளை காலை 9 மணிக்கு முதல் ஷோ!
சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 'தக் லைஃப்' படத்தின் முதல் ஷோ நாளை காலை 9 மணிக்கு தொடங்கும்.
சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், 'தக் லைஃப்' திரைப்படத்தை நாளை மொத்தம் 5 காட்சிகள் திரையிடலாம். தமிழக அரசின் இந்த அறிவிப்பால் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைஃப்' திரைப்படம் உருவாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அபிராமி, அசோக் செல்வன், நாசர் என முக்கியமான நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படம் நாளை ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் நிலையில் முன்பதிவுகளில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்வில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்து கர்நாடகத்தில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தக் லைஃப் படம் அங்கு வெளியாகாது எனத் தெரிகிறது. இதுதொடர்பான வழக்கில் கமலிடம் நேற்று கர்நாடக நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழகத்தில் நடிகர் கமலுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு 'தக் லைஃப்' படத்துக்கு நாளை (ஜூன் 5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, V. நாராயணன் அவர்கள், தக் லைப் என்ற திரைப்படத்திற்கு ஜூன் 5 அன்று வெளியாகும் நான் மட்டும் கூடுதாக ஒரு சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி அளிக்கும்படி அரசைக் கோரியுள்ளார்.
இந்த நேர்வில் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும் காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும். மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும் சிரமமின்றி வெளியேறவும், திரையரங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும் போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன் Raaj Kamal Films International ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒரு நாள் மட்டும் 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிட அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications