மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்க தடை! எதிர்ப்பால் அவசர ஆர்டரை பின்வாங்கியது விஜய் அரசு!
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு வாபஸ் வாங்கி உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அதிகாரப்பூர்வ அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த உத்தரவிற்கு தமிழ்நாடு முழுக்க மாணவர்கள், மாணவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அரசு கடிதம்
கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதியிட்ட அரசு கடிதத்தை மேற்கோள் காட்டி, கல்லூரி கல்வி ஆணையருக்காக இணை இயக்குநர் பி. சிந்தியா செல்வி இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தார்.
அதில், மாணவ, மாணவிகள் பொதுவெளியில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்வதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்காணித்து தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டது.. பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இது தொடர்பாக உடனே ஆலோசனைகளை செய்து, ஒருமித்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்
இந்த சுற்றறிக்கையின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கல்வி வளாகங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.
முக்கியமாக இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுக்கும் போராட்டங்கள், பேரணிகள் அல்லது கிளர்ச்சிகளில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தங்களின் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவர அறிக்கையை உடனடியாக கல்லூரி கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இந்த சுற்றறிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இது மிக அவசரம் என்ற குறிப்புடன் அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டது.
துறை ரீதியான ஒருங்கிணைப்பு ஏன்?
சமீப காலமாக அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது தவெகவை பயத்திற்கு ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கல்வி வளாகங்களின் அமைதியை பேணவும், மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மாணவர்கள் போராட்டம் செய்ய கூடாது என்று அரசு நினைப்பதே இந்த ஆர்டருக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மாவட்ட அளவில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் நேரடி தொடர்பில் இருந்து, அசம்பாவிதங்கள் அல்லது சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
விஜய் உத்தரவு வாபஸ்
இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அரசு இந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது. நாளை கம்யூனிஸ்ட் மாணவ இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொள்வதாக அறிவித்த நிலையில் உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
