அரசு ஊழியர்களுக்கு கெடு! சொத்து விவரங்களை சமர்ப்பிக்காவிட்டால் பதவி உயர்வு கட்.. விஜய் அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை முழுமையாக இணையவழியில் கணக்கு காட்ட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் ஐ.ஏ.எஸ் இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு சொந்தமான 'ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்' (IFHRMS) இணையதளத்தில் அக்டோபர் 31-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கத் தவறினால், பதவி உயர்வு ரத்து செய்யப்படும் என்பதோடு துறைசார் ஒழுங்கு நடவடிக்கையும் பாயும் என அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

vijay tvk

என்னென்ன சொத்துகளை கணக்கு காட்ட வேண்டும்?

வழக்கமாக ஆண்டுதோறும் சம்பிரதாயமாக தாக்கல் செய்யப்படும் பொதுவான அறிக்கைகளைப் போல இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு ஊழியரும் மிகத் துல்லியமான தகவல்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் மற்றும் கடன்கள் என மூன்று வகைகளிலும் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

முதலாவதாக, நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் ஆவண விவரங்கள், அவை வாங்கப்பட்ட மதிப்பு மற்றும் வழிகள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவதாக, வங்கி சேமிப்புக் கணக்குகள், வைப்புத் தொகைகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், பங்குச் சந்தை வர்த்தகம், இருசக்கர வாகனங்கள் முதல் கார்கள் வரையிலான வாகன விவரங்கள் மற்றும் தங்க, வைர நகைகளின் மதிப்பு வரை அனைத்து அசையும் சொத்துகளையும் பட்டியலிட வேண்டும்.

மூன்றாவதாக, ஊழியர்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன், தனிநபர் கடன், அரசு முன் பணங்கள் மற்றும் இதர வெளிக்கடன்கள் உள்ளிட்ட பொறுப்புகளையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

பினாமி சொத்துகளுக்கும் செக்!

இந்த உத்தரவில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான அம்சம் பினாமி சொத்துகள் மீதான கண்காணிப்பு ஆகும். அரசு ஊழியர் தன் பெயரில் மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் சொத்துகளை வாங்கியிருந்தாலோ, முதலீடு செய்திருந்தாலோ அதையும் ஒளிவுமறைவின்றி கணக்கில் காட்ட வேண்டும்.

அந்த நபர் ஊழியருக்கு என்ன உறவு, அந்தச் சொத்து எந்தப் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டது என்ற விவரங்களையும் கட்டாயம் உள்ளிட வேண்டும். ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பிறர் பெயரில் சொத்துகளை பதுக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவே இந்த கடுமையான விதி சேர்க்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்கு நேரடி வேட்டு!

கடந்த காலங்களில் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பதில் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அலட்சியம் நிலவி வந்தது. நேரடி பாதிப்புகள் இல்லாததால் பலரும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், இம்முறை அரசு விடுத்துள்ள உத்தரவு ஊழியர்களின் எதிர்காலப் பணியை நேரடியாகப் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

துறைசார் பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கும் போது, குறிப்பிட்ட ஊழியர் ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ் தளத்தில் தனது சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்துவிட்டாரா என்பதை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். சொத்துக் கணக்கு தாக்கல் செய்யாத ஊழியர்களின் பெயர்கள் பதவி உயர்வுப் பட்டியலில் சேர்க்கப்படாது.

மேலும், அக்டோபர் 31-க்குள் விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால், அது 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள், 1973'-ஐ மீறிய குற்றமாகக் கருதப்படும். இதன் காரணமாக துறைசார் விசாரணைகள் தொடங்கப்பட்டு, அவர்களின் பதவி உயர்வே காலவரையின்றி முடக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

டிஜிட்டல் முறைக்கு மாறிய பழைய திட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சொத்து விவரங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் திட்டம் புதிதல்ல. கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இதுபோன்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. பணியில் சேரும்போது ஒரு முறையும், பின்னர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது.

ஆனால், காகித வடிவில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்ததால், அந்த ஆவணங்கள் கோப்புகளில் புதைந்துபோயின; பல அலுவலகங்களில் காணாமலும் போயின. இதனால் சட்டவிரோத வருவாய் குவிப்பை கண்காணிப்பது கடினமாக இருந்தது.

அந்தப் பழைய குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ஒட்டுமொத்த நடைமுறையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் மாதச் சம்பளம், பணிக்கொடை, சேவைப் பதிவேடுகள் கையாளப்படும் 'ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்' தளத்திலேயே இதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதால், இனி யார் சமர்ப்பித்தார்கள், யார் விடுபட்டார்கள் என்பதை மாநில அளவில் ஒரே கிளிக்கில் அரசால் எளிதில் கண்காணிக்க முடியும்.

ஊழியர்கள் மத்தியில் கிளம்பியுள்ள குழப்பம்

விஜய் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அரசு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் மத்தியில் கலக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பூர்வீகச் சொத்துகளின் ஆவணங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தங்க நகைகளின் தற்போதைய மதிப்புச் சான்றிதழ்கள், பழைய பத்திரங்கள் ஆகியவற்றை குறுகிய காலத்திற்குள் திரட்டி பதிவேற்றுவது பெரும் சவாலாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஊதியப் பட்டியல் தயாரிக்கும் நாட்களில் ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ் சர்வர் அடிக்கடி முடங்குவது வழக்கம். லட்சக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் சொத்து விவரங்களை பதிவேற்ற முயலும்போது இணையதளம் முடங்கிவிட்டால், தங்களின் தவறு இன்றியே பதவி உயர்வை இழக்க நேரிடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு எழுந்துள்ளது.

இருப்பினும், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து அரசுத் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நிர்வாகத்தில் நேர்மையும் தூய்மையும் நிலவ வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதால், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் சொத்துக் கணக்கை திரட்டும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+