மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000லிருந்து ரூ.8,000 ஆக உயர்வு! 1,79,000 மீனவ குடும்பங்கள் பயன்
சென்னை: மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மீனவர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை மூலம் தமிழகத்தில் 1,79,000 மீனவ குடும்பங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு;
''கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.
அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் 2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000/-லிருந்து ரூ.8000/- ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.''












Click it and Unblock the Notifications