கொரோனா அச்சம்.. சட்டசபை கூட்டத்தை நடத்த வேறு இடம் தேடும் தமிழக அரசு
சென்னை: கொரோனா தொற்று அச்சம் காரணமாக, சென்னை ஜார்ஜ் கோட்டையைவிட்டு வேறு இடத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தலாமா என்று யோசித்து வருகிறது.
Recommended Video
சட்டப்பேரவை விதியின்படி 6 மாதத்திற்கு ஒருமுறை சட்ட சபை கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டு பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு, ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம்.
இந்த ஆண்டு மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மார்ச் 9ம்தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டது.. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24ம் தேதியுடன் முடிக்கப்பட்டது.

சட்டசபை கூட்டம் கட்டாயம்
சட்டசபை கூட்டம் முடிந்த 6 மாதத்திற்குள் மீண்டும் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதால் வருகிற செப்டம்பர் 24ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே செப்டம்பரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஜார்ஜ் கோட்டை சிறியது
தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கம் மிகவும் சிறியது. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களை சமூக இடைவெளியை பின்பற்றி அங்கு அமர வைக்க இயலாது. எனவே தலைமை செயலக வளாகத்தை விட்டு வெளியில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது. அதனால், தற்போதுள்ள இடத்துக்கு மாற்று ஏற்பாடாக வேறு இடங்களில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்தலாமா என்பது குறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

கலைவாணர் அரங்கம்
அதன்படி, சட்டசபை குளிர்கால கூட்டத்தை சென்னை, கலைவாணர் அரங்கம் அல்லது சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடத்தலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில், கலைவாணர் அரங்கத்தில் நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏனெனில்சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் நேற்று காலை நேரில் வந்து பார்வையிட்டார். அவருடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வந்தார்கள்.

தமிழக அரசு ஆலோசனை
கலைவாணர் அரங்கில் 234 எம்எல்ஏக்கள் மற்றும் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கூட்டத்தை நடத்த முடியுமா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு சபாநாயகர் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினார். இதனிடையே கலைவாணர் அரங்கத்திலேயே வருகிற சட்டசபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சபாநாயகர் தனபால், "சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில்தான் நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும் என்று பேட்டியின் போது கூறினார். சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் மிகப்பெரியது என்பதால் சமூக இடைவெளியுடன் சட்டசபை கூட்டம் நடத்துவது சாத்தியம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications