மமதா பாணியில் பல்கலைக் கழக வேந்தர்களான ஆளுநரை தூக்கிவிட்டு கல்வியாளர்கள்- ரவிக்குமார் கோரிக்கை
சென்னை: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பாணியில் தமிழகப் பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு கல்வியாளர்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
மணற்கேணி இதழில் இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. எழுதியுள்ள தலையங்கம்: தமிழ் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் மொழிக்கென உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் கடந்த 25 ஆண்டுகளில் அதன் நோக்கத்தை எந்த அளவுக்கு எட்டியிருக்கிறது? அவ்வாறு எட்டாமல் போனதற்குக் காரணம் என்ன? அரசியல் தளத்தில் தமிழின் மேன்மை உயர்த்திப் பிடிக்கப்பட்ட அளவுக்கு கல்வியியல் தளத்தில் அது உயர்த்திப் பிடிக்கப்படவில்லை . இது அரசியலாளரின் தோல்வியல்ல, கல்வியாளர்களின் தோல்வி.. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துணைவேந்தர் இந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அவருக்குத் தேவையான ஒத்துழைப்பையும், உதவியையும் நல்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.

தொலை நோக்கோடு தமிழ் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்குப் பொருத்தமான பேராசிரியர்கள் தற்போது இல்லை. தகுதியானவர்கள் இல்லையென்றால் வருகைதரு பேராசிரியர்களைக் கொண்டு வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல்வேறு துறைகளுக்கிடையில் ஒருங்கிணைந்த அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை தேவை.
மத்திய அரசால் உயர்க்கல்வி நிலையங்கள் வருமானம் ஈட்டும் மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தான் ஈட்டும் நிதியைக் கொண்டே நிர்வகிக்கப் படவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதனால் பல்கலைக்கழகங்கள் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பு கொண்ட பட்டங்களைத் தரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் துறைக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். அங்கே தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றில் வருவாய்த்துறை சார்ந்த சுமார் 1500 ஓலைச்சுவடி சுருணைகள் உள்ளன. அவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஓலைச்சுவடிகள் 180 கட்டுகள் இருக்கின்றன.
அவை 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தாமஸ் பெர்னார்டு ( 1746-1830) என்பவர் 1767 ஆம் ஆண்டுக்கும் 1774 க்கும் இடையில் செங்கல்பட்டு பகுதியில் 15 சீமைகளைச் சேர்ந்த 2138 ஊர்களில் நிலம்,விவசாயம், மக்கள்தொகை உள்ளிட்ட விவரங்களைக் கணக்கெடுப்புச் செய்து அவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார். தற்போது தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பில் இருக்கும் அந்தச் சுவடிகள் தமிழ்நாட்டின் வரலாற்றை மட்டுமின்றி இந்திய வரலாற்றையும் அறிந்துகொள்ள உதவக்கூடியவை. செங்கல்பட்டு சுவடிக் கட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஆயிரம் ஏடுகளுக்கு மேல் உள்ளன. அவற்றை முழுவதுமாக பதிப்பிக்க வேண்டும். அதற்குமுன் அவற்றை டிஜிட்டல் முறையில் படியெடுக்க வேண்டும். செங்கல்பட்டு சுவடிகள் மட்டுமின்றி மருத்துவம் உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த சுவடிகள் சுமார் 8000 பண்டல்கள் அங்கு உள்ளன.
தற்போது ஓலைச்சுவடிகள் துறையில் 'பிரிட்டிஷ் லைப்ரரியின்'நிதி நல்கையால் டிஜிட்டல் முறையில் சுவடிகளைப் படியெடுக்கும் பணி நடந்து வருகிறது. 2022 டிசம்பர் வரை உள்ள அந்தத் திட்டத்தின்கீழ் மருத்துவம் உள்ளிட்ட சுவடிகளில் இதுவரை சுமார் 1200 'டைட்டிலகள்' டிஜிட்டல் முறையில் படியெடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 2 காமிராக்கள் , ஆட்கள் இருந்தால் விரைவாக இந்தப் பணிகளை முடிக்கலாம். 'சுவடிகளைப் படியெடுப்பதற்கு முன்பு அவற்றைப் பாதுகாக்க வேண்டும். சுவடிகள் உடைந்து சிதையாமல் இருக்க லெமன் கிராஸ் எண்ணெய் தடவிப் பராமரிக்க வேண்டும். அதற்கு ஆண்டுக்கு 250 கிலோ எண்ணெய் தேவைப்படும் , சுவடிகளில் எண்ணெய் பூச தினக்கூலி அடிப்படையில் சில பணியாளர்களை அமர்த்தவேண்டும். இவற்றுக்கு எல்லாமாகச் சேர்த்து ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் தேவைப்படலாம்' என அத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்கு ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட சுவடிகளை அடிப்படையாக வைத்து 5 பேர்கூட பிஎச்டி செய்யவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி பிற கல்லூரிகள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களும் இந்தச் சுவடிகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தால் அது தமிழ்நாட்டின் சமூக, வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். சுவடிகள் முழுவதையும் டிஜிட்டல் படியெடுத்து இணையத்தில் தரவேற்றம் செய்தால் உலக ஆளவில் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் பலவற்றை டி என் பி எஸ் சி அங்கீகரிக்கவில்லை. அதனால் கல்வெட்டியல், தொல்லியல், சிற்பவியல், ஓலைச்சுவடி இயல் -எனப் பல்வேறு துறைகளில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதியுறுகின்றனர். அவர்களது பட்டங்களை டி என் பி எஸ் சி அங்கீகரிக்காததால் அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட முடியாத நிலை உள்ளது. வேலை வாய்ப்பு இல்லாத படிப்புகளில் புதிதாக மாணவர்கள் சேர்வதுமில்லை.
அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டங்களை அரசு தேர்வாணையமே அங்கீகரிக்க மறுப்பது முரணாக உள்ளது. ஒரு பல்கலைக்கழகம் குறிப்பிட்ட ஒரு பட்டத்துக்கான பாடத் திட்டத்தை முறையாக அமைக்கப்பட்ட குழுவின் மூலம் தீர்மானிக்கிறது. அந்தப் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டம் செல்லாது, அது வேலைவாய்ப்புக்கு உகந்ததல்ல என்று சொன்னால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆவது ?
தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் மாநில அரசு நடத்துகின்ற பல்கலைக்கழகங்கள் பலவற்றிலுமிருந்தும் வழங்கப்பட்ட பல பட்டங்களை டிஎன்பிஎஸ்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களது பட்டியலில் இருக்கும் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்களை மாற்றும்படி டிஎன்பிஎஸ்சி நிர்ப்பந்திக்கிறது. இது செருப்புக்கு ஏற்ப காலை வெட்டச் சொல்வது போன்றதாகும்.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுசெல்வதற்கு இந்திய ஒன்றிய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருப்பதால் அவர்கள் மூலமாகத் துணைவேந்தர் நியமனம், பேராசிரியர் நியமனங்களில் ஆதிக்கம் செய்கிறது. பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை முடிவுசெய்வது உட்பட பல்வேறு பணிகளில் ஆளுநர்கள் தலையிடுகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி மேற்குவங்க மாநிலத்திலும் இதே நிலைதான். ஆளுநரின் தலையீட்டைத் தவிர்ப்பதற்கு ஆளுநருக்குப் பதிலாக கல்வியாளர்களை வேந்தர்களாக நியமிக்கவும், அதுவரை மாநில முதலமைச்சரே வேந்தர் பொறுப்பு வகிக்கவுமான சட்ட வாய்ப்புகளை அம்மாநில அரசு ஆராய்ந்து வருகிறது. மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டிவரும் தமிழ்நாடு இதிலும் நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவேண்டும். பொது பல்கலைக்கழக சட்டம் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் மணற்கேணி பத்திரிகை தலையங்கத்தில் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications