மத்திய அரசின் உதவி இல்லாமல் 1000 ஏசி பஸ்களை வாங்குவதால் தமிழ்நாட்டிற்கு பல கோடி இழப்பு
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு புதிதாக 1,000 ஏ.சி. மின்சார பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது உண்மையில் மிகவும் பயனுள்ள விஷயம். இந்த பஸ்களை இயக்க தேவையான மின் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.500 கோடியும் அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், மத்திய அரசு செயல்படுத்தி வரும் 2 முக்கிய மின்சார பஸ் திட்டங்களை தமிழகம் பயன்படுத்திக் கொள்ளாததால், தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏன் அரசு மத்திய அரசின் உதவியை விரும்பவில்லை என்பதேஇங்கு பெரிய கேள்வியாக உள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் நாட்டில் மின்சார பஸ்களை ஊக்குவிக்கும் இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று பிரதமர் மின்சார பஸ் சேவை திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சார பேருந்துகளை இயக்க விரும்புகிறது மத்திய அரசு. இதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு உதவி வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் ₹20,000 கோடி உதவியை 10,000 பேருந்துகளுக்கு நாம் பிரித்து கணக்கிட்டால், ஒரு பேருந்துக்குச் சராசரியாக ₹2 கோடி ரூபாய் அரசு தருகிறது. மற்ற மானியங்களை கணித்து, சற்றே குறைத்து கணக்கிட்டாலும் 1.72 கோடி வரை துல்லியமாக கிடைக்கும்

1.72 கோடி கிடைக்கும்
இந்த 1.72 கோடியை அப்படியே மொத்தமாக கொடுக்காது..'பிஎம் இ-பஸ் சேவா' திட்டத்தின் விதிகளின்படி பேருந்துகள் இயக்கப்படும் தூரத்தைப் பொறுத்து, 10 ஆண்டுகளுக்கு கிலோமீட்டர் கணக்கில் மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அதன்படி 12 மீட்டர் நீளமுள்ள மின்சார பஸ்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.24 வீதம் மத்திய அரசு மானிய உதவி வழங்கும். ஒரு பஸ்சுக்கு தினமும் 200 கிலோமீட்டர் இயக்கம் என்ற அடிப்படையில் இந்த உதவி கணக்கிடப்படும்.
தினமும் ரூ.4,800 மத்திய நிதியுதவி
இதன்படி ஒரு பேருந்துக்கு தினமும் ரூ.4,800 மத்திய நிதியுதவி கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு ரூ.17.52 லட்சம் வீதம் 10 ஆண்டுகளுக்கு ரூ.1.752 கோடி கிடைக்கும. தமிழக அரசு வாங்கும் 1,000 பஸ்களுக்கு கணக்கிட்டால், 10 ஆண்டுகளில் ரூ.1,752 கோடி அளவுக்கு மத்திய அரசின் உதவி கிடைத்திருக்கும். அதேநேரம் 3 ஆயிரம் பஸ் வாங்குகிறோம் என்றால் சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைக்கும். அதேபோல் பஸ்களை இயக்க தேவையான மின் கட்டமைப்புக்கு 100 சதவீதம் வரையும், பஸ் பணிமனை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு மாநில நகரங்களில் 60 சதவீதம் வரையும் மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.
இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால்,'பிஎம் இ-பஸ் சேவா' திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் ஆந்திரபிரதேசத்துக்கு 1,050 பேருந்துகள், ராஜஸ்தானுக்கு 1,150 பேருந்துகள், மகாராஷ்டிராவிற்கு 1,609, மத்தியபிரதேசத்துக்கு 972 பேருந்துகள், கர்நாடகத்துக்கு 750 பேருந்துகள், குஜராத்துக்கு 750 பேருந்துகள், தெலுங்கானாவுக்கு 151 பேருந்துகள் என பல்வேறு மாநிலங்களுக்கு பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
'பி.எம்.இ-டிரைவ்' திட்டம்
அதேபோல் மத்திய அரசின் மற்றொரு முக்கிய திட்டம், பிரதமர் மின்சார வாகன இயக்க திட்டம் எனப்படும் 'பி.எம்.இ-டிரைவ்' திட்டம் ஆகும். அதன்படி 12 மீட்டர் கொண்ட ஒரு மின்சார பஸ் வாங்க அதிகபட்சமாக ரூ.35 லட்சம் மத்திய அரசு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 28 மின்சார பஸ்களை இயக்க ரூ.4,391 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 9 பெரிய நகரங்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டன.
தமிழக அரசு கோரிக்கை வைக்கவே இல்லை
இதில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, சூரத், புனே ஆகிய நகரங்கள் இடம்பெற்றன. ஆனால், பஸ்கள் ஒதுக்கப்பட்டபோது பெங்களூருவுக்கு 4,500, டெல்லிக்கு 2,800, ஐதராபாத்துக்கு 2,200, மும்பைக்கு 1,500, ஆமதாபாத் 1,200, புனே 1,000, சூரத் 600 பஸ்கள் என மொத்தம் 13,800 பஸ்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சென்னைக்கு மட்டும் ஒரு பஸ்கூட ஒதுக்கப்படவில்லை. என்ன காரணம் என்று பார்த்தால், சென்னை மற்றும் கொல்கத்தாவில் இருந்து இந்த திட்டத்துக்கு எந்த முன்மொழிவும், கோரிக்கையும் முந்தைய அரசுகளிடம் இருந்து வரவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
ஏன் பயன்படுத்தவில்லை
மத்திய அரசின் திட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் சேர்ந்து மத்திய நிதியை பயன்படுத்திக்கொள்கின்றன. தமிழகம் மட்டும் ஏன் அந்த திட்டங்களில் சேரவில்லை? என்ற கேள்வி எழும் தானே.. அதற்கான விடை ஆச்சரியமானது. மற்ற மாநிலங்கள் மத்திய அரசின் உதவியோடு தங்கள் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு மின்சார பஸ்களை இயக்கும் நிலையில், தமிழகத்தில் சென்னை தாண்டி மின்சார பஸ்கள் வேறு எங்குமே இல்லை.
திமுக அரசு விரும்பவில்லை
இதுபற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, முன்பு ஆட்சியில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மத்திய அரசின் மின்சார பஸ் திட்டத்தை தமிழக அரசு ஏற்கவில்லை. அதற்கு பதிலாக தமிழக அரசே பஸ்களை வாங்கி இயக்கியது. ஒரு கிலோமீட்டருக்கு ரூ.80 வரை வழங்கியது. நாட்டிலேயே அதிகபட்ச கட்டணம் இதுதான். மற்ற மாநிலங்களில் ஒரு கிலோமீட்டருக்கு மிக அதிகபட்சம் ரூ.70 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மானியத்தை வேண்டாம் என்ற தமிழ்நாடு
மத்திய அரசின் திட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.24 மானியம் கிடைத்தது. இதனால் அந்த மாநிலங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கான உண்மையான செலவு ரூ.46 ஆக இருந்தது. ஆனால், தமிழகத்தில் ரூ.80 செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி, மின்சார பஸ்களுக்கான மின் கட்டமைப்பு மற்றும் பணிமனை உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் மத்திய அரசின் நிதியுதவி தருகிறது. அந்த உதவியையும் தமிழ்நாடு பயன்படுத்தவில்லை.
கண்காணிப்பு காரணமா
இப்போது த.வெ.க. அரசு புதிதாக 1,000 ஏசி மின்சார பஸ்களை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான உள்கட்டமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் சேராமல், தமிழக அரசே தொடர்ந்து அதிக செலவு செய்வது ஏன் என்பது புரியவில்லை. மத்திய திட்டத்தில் கண்காணிப்பு மற்றும் கணக்கு நடைமுறைகள் இருப்பதால், அதனை தவிர்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. இதற்கு அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்." என்று கூறினார்கள்.


Click it and Unblock the Notifications
