எச்.ராஜா, அண்ணாமலையை கடுமையாக தாக்கி பேசிய அமைச்சர்.. பரபரப்பு பேட்டி!
சென்னை: இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான ரூ.1,130 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். தனியார் உயர்நிலைப்பள்ளியிடம் இருந்து சுவாதீனம் பெறப்பட்ட கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 76 கிரவுண்ட் மைதானத்தை பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இந்த மைதானத்திற்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அமைச்சர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

அண்ணாமலை
முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார். தலைவர் கருணாநிதி இறந்ததை அடுத்து தலைவர் பொறுப்புக்கு வந்த மு க ஸ்டாலின் கட்சியை சிதைவு ஏற்படாமல் கட்டுக்கோப்பாக காத்து நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் இந்தியத் துணைக் கண்டமே திரும்பிப்பார்க்கின்ற வகையில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின்
திறமை, ஆளுமை, சுயமாக, சிந்திக்கும் தன்மை, மனிதநேயம், தொலை நோக்கு பார்வை உள்ளிட்டவை கொண்டவர் தி.மு.க தலைவர். மு.க.ஸ்டாலின் அரசியல் வயதையும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அரசியல் வயதையும் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.. அனைத்து திறமையும் கொண்ட தி.மு.க தலைவரின் அரசியல் வயது 50 வருடங்களையும் கடந்தது.

சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது
அவரின் சிறப்பை பிற மாநிலங்களான கேரளா, ஆந்திர அறிந்திருக்கும் நிலையில், பா.ஜ.க தலைவர்கள் அறியாதது வியப்பை அளிக்கிறது. இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆயிரத்து 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

எச்.ராஜா
இந்து சமய அறநிலையத்துறையை தேவை இல்லை. இந்து கோவில்களை இந்து மக்களே ஆள வேண்டும் என்கின்ற வகையில் பா.ஜ.க தலைவர் எச்.ராஜா பேசியது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர் எச்.ராஜாவிற்கு அரசியல களம் இல்லாததால் எதை எதையோ பேசி தனக்கு அரசியல் களத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என விமர்சித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ளன
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ' இதுவரை, ரோவர் நவீன கருவி மூலம் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை துறையில் பயன்படுத்தப்படுவது போல கோயிலுக்கு சொந்தமான அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் எல்லை கற்கள் வைக்கப்படும் எனவும் அந்த பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications