“ஐடியா”.. ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் நடத்தலாமே! திராவிட நாயகன் ஸ்டாலின் - டிஆர்பி ராஜா யோசனை
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்து இருக்கும் நிலையில், கிரிக்கெட்டை போலவே ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் போட்டிகளை நடத்தலாம் என்று யோசனை பகிர்ந்து உள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இதுகுறித்து அப்போது பேஸ்புக்கில் புகைப்படத்தின் பதிவிட்டு இருந்தார்.

அதில், "மதுரை அலங்காநல்லூரில் கழகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினேன். எழுச்சிமிகு ஆர்பாட்டத்தில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு கழக ஆட்சியில் பாதுகாப்புடன் நடத்தப்பட்டதை விளக்கி, வரும் தை பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த அந்த முதலமைச்சர் ஸ்டாலினின் 2017 ஆம் ஆண்டு பேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் , "ஜல்லிக்கட்டு வெற்றித் தீர்ப்புக்கு வித்திட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் திராவிட நாயகன்.

ஜல்லிக்கட்டுத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல், ராகேஷ் திரிவேதி, முகுல் ரோகத்கி ஆகியோரை அமர்த்தி, தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை வலிமையான வாதங்களாக எடுத்துரைக்கச் செய்ததன் விளைவாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது மாண்பமை உச்சநீதிமன்றம்.
2017 ஜனவரியில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தைத் தொடங்கிய நம் திராவிட நாயகர், அதற்கான சட்டப் போராட்டத்திலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, சளைக்காமல் ஈடுபட்டு இந்த மகத்தான வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெறாத மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் அதனை நடத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமை மீட்கப்பட்டு, இனி உலகளாவிய கவன ஈர்ப்புடன் தமிழ்நாடெங்கும் ஜல்லிக்கட்டு சிறக்கும். திராவிட நாயகரான முதலமைச்சரின் பெயர் உரக்க ஒலிக்கும். கிரிக்கெட்டுக்கு மட்டும் தான் லீக் இருக்க வேண்டுமா! ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் ஆரம்பிக்கலாமே." என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்து உள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்." என்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications