ஒரே சொத்தில் பல வங்கிகளில் கடன் பெறுவதை தடுக்க புதிய நடைமுறை.. அடமான சொத்திலும் மாற்றம்
சென்னை: ஒரே சொத்தை அடமானமாக வைத்து ஒருவர் பல வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதை தடுக்க புதிய நடைமுறையை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இதன்படி இனி உடனடியாக அடமான விவரம் வில்லங்கச் சான்றிதழில் உடனடியாக பிரதிபலிக்க போகிறது. இதன் மூலம் கடன் கொடுத்து நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஏமாறுவது தடுக்கப்படும். ஒரே சொத்தில் பல வங்கிகளில் கடன் பெறுவதை தடுக்க தமிழக அரசு கொண்டுவரும் புதிய நடைமுறை பற்றி பார்ப்போம்.
வங்கிகளில் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினால் வட்டி குறைவு. இதனால் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்க வீட்டு பத்திரத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைப்பது அதிகமாக உள்ளது. அப்படி அடகு வைத்து கடன் வாங்கும் சிலர், ஒரே பத்திரத்தை அடமானம் வைத்த பல வங்ககளில், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிவிட்டு, அதனை ஏமாற்றுவதும் நடக்கிறது. சொத்தின் மதிப்பைவிட அதிகமாக கடன் தந்து வங்கிகள் ஏமாறுகின்றன. இது ஒருபுறம் எனில் அடமானம் வைக்கப்பட்ட சொத்தை வாங்கி மக்கள் ஏமாறுவதும் அதிகமாக நடக்கிறது.

ஏனெனில் தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில் ஒரே சொத்தை அடமானமாக வைத்து ஒருவர் ஏற்கனவே ஒரு வங்கியில் கடன் பெற்றிருந்தாலும், அந்த அடமான விவரம் வில்லங்கச் சான்றிதழில் உடனடியாக பிரதிபலிக்காத நிலை இருக்கிறது. அதனால் அதே சொத்தை மீண்டும் மற்றொரு வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த சொத்தின் மீது கடன் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் அதை வாங்கினால், பின்னர் வங்கி கடன் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கி, சொத்தின் உரிமை தொடர்பாக தகராறு ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கும் வகையில், வங்கிகளுக்கு தமிழக அரசு சில அறிவுறுத்தல்கள் வழங்கி இருக்கிறது, இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை தலைவர் அருண் தயாள் சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பதிவுத்துறையில் தற்போது எங்கிருந்தும் பதிவு திட்டத்தின்கீழ் வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் குறிப்பிட்ட வகை ஆவணங்களுடன் உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு மற்றும் அடமான ஆவணங்களும் இணையவழியில் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய தேவையை குறைத்து, பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே சொத்தின் மீது பல்வேறு கடன்கள் பெறப்பட்டு, மோசடியாக பல்வேறு அடமான ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் வில்லங்கச் சான்றிதழில் அடமான ஆவணப்பதிவு விவரம் பிரதிபலித்துள்ளதை உறுதி செய்த பின்னரே கடன் தொகையை விடுவிக்குமாறு மாநில அளவிலான வங்கியாளர் குழு மூலம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
